
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் நெடுஞ்சாலையை கட்டமைத்துள்ளது என்று மத்திய தகவல்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
யஷோபூமியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2025 மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்ப எழுச்சியை எடுத்துரைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாட்டின் தொலைதூரப் பகுதிகளை தொழில்நுட்பத்தின் மூலம் இணைத்துள்ளது என்று சிந்தியா கூறினார். "கடந்த 11 ஆண்டுகளில், மோடியின் தலைமையிலான அரசாங்கம் உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் நெடுஞ்சாலையை கட்டமைத்துள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
"நம் தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள், மற்றும் தொழில்துறையினர் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். கைவினைப் பொருட்கள், செமிகண்டக்டர்ஸ் தயாரிப்பவர்கள் உலகச் சந்தையுடன் இணைந்துள்ளனர்" என்று அவர் மேலும் கூறினார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் போன்கள் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் தொடங்கியது. அது இப்போது செமிகண்டக்டர் உற்பத்தி வரை உயர்ந்துள்ளது என்று சிந்தியா நினைவுகூர்ந்தார். இந்த முன்னேற்றம், புதுமை மற்றும் தற்சார்பை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் வெற்றியைப் பிரதிபலிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சர் சிந்தியா "உலகளாவிய இணைப்புக்கான விண்வெளி நெட்வொர்க்குகள்" (Space Networks for Universal Connectivity) குறித்த சாட்காம் உச்சி மாநாட்டையும் (Satcom Summit) தொடங்கி வைத்தார். இது ஐ.எம்.சி 2025-ன் ஒரு பகுதியாக நடைபெற்றது.
"இனி செயற்கைக்கோள் தொடர்பு (SATCOM) ஒரு ஆடம்பரமல்ல; அது ஒரு உரிமை" என்று அவர் கூறினார், இந்தத் தொழில்நுட்பம் விவசாயிகள், மீனவர்கள், மருத்துவர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் என அவர் தெரிவித்தார்.
டிஜிட்டல் பாரத் நிதி மற்றும் யுனிவர்சல் சர்வீஸ் ஒப்ளிகேஷன் ஃபண்ட் (USOF) மூலம், 38,260 கிராமங்களுக்கு செயற்கைக்கோள் சேவைகளை வழங்க மத்திய அரசு ரூ.40,000 கோடி முதலீடு செய்துள்ளது. இதில் கிட்டத்தட்ட 29,000 கிராமங்கள், அதாவது சுமார் 75 சதவீதம் ஏற்கனவே பயன்பெற்றுளன என்று அமைச்சர் சிந்தியா தெரிவித்தார்.
"இந்தியா செயற்கைக்கோள் சேவைகளின் பயனாளியாக மட்டும் இருக்கக்கூடாது. ஏற்றுமதியாளராகவும், உலகளாவிய மையமாகவும் மாற வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.