
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்நாட்டிலேயே தயாரான ஜோஹோ மெயில் (Zoho Mail) சேவைக்கு மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக அண்மையில் அறிவித்ததை அடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட (Make in India) பொருட்களைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
சென்னையைத் தளமாகக் கொண்டு 2008-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜோஹோ மெயில், கூகுள் மெயிலுக்கு மாற்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த இந்திய மின்னஞ்சல் சேவைக்கு மாறியுள்ளதைத் தனது 'எக்ஸ்' (முன்பு ட்விட்டர்) தளத்தில் அமித்ஷா பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அனைவருக்கும் வணக்கம். நான் ஜோஹோ மெயிலுக்கு மாறிவிட்டேன். என்னுடைய மாற்றம் செய்யப்பட்ட இ-மெயில் முகவரியைக் குறித்துக்கொள்ளுங்கள். என்னுடைய புதிய இ-மெயில் முகவரியானது, amitshah.bjp@zohomail.in ஆகும். வருங்காலத்தில் மெயில் அனுப்புவதற்கு இந்த முகவரியைப் பயன்படுத்தவும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனது பதிவை முடிக்கும்போது, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நினைவுபடுத்தும் வகையில், "இந்த விஷயத்தில் நீங்கள் கவனம் செலுத்தியதற்காக நன்றி" (Thank you for paying attention to this) என்று குறிப்பிட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை வலுப்படுத்தும் விதமாக அமித்ஷாவின் இந்த மாற்றம் பற்றிய அறிவிப்பு அமைந்துள்ளது.
சமீபத்தில், ஜோஹோ நிறுவனம், இந்தியர்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட 'அரட்டை' (Chatting) என்ற செயலியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தச் செயலியை, அரட்டை வலைதளத்திலோ அல்லது கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றிலோ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.