
பாரதிய ஜனதா ஆளும் மஹாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த 6 மாதத்தில் மட்டும் 1,129 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த மே மாதத்தில் மட்டும் 243 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கறது. இங்கு முதல்வராக பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ் உள்ளார்.ஓஸ்மனாபாத், யவத்மால் ஆகிய மாவட்டத்தில் பருவநிலை மாறுபாடு, வேளாண் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு, போதிய விளைச்சல் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது.
இதில் ஓஸ்மனாபாத், யவத்மால் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அமராவதி மாவட்டத்தில் 426 விவசாயிகளும், அவுரங்காபாத்தில் 380 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.
ஆனால், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு விவசாயிகள் தற்கொலை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 1,293 விவசாயிகள் தற்கொலை செய்திருந்தனர்.
இந்நிலையில், மஷாராஷ்டிரா அரசு விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்துள்ளதால், அடுத்துவரும் மாதங்களில் விவசாயிகள் தற்கொலை குறையும் என மாநில வேளாண் துறை நம்புகிறது.
இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ கடந்த 2008ம் ஆண்டு இதேபோல விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வந்தபோது, வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவுடன், விவசாயிகள் தற்கொலை குறைந்தது.அதுபோல் இந்த ஆண்டும் குறையும் என நம்புகிறோம்’’ என்றார்.
அவுரங்காபாத் மண்டல ஆணையர் அளித்தள புள்ளிவிவர அறிக்கையில், “மராத்வாடா பகுதியை சுற்றியுள்ள 8 மாவட்டங்களில் மட்டும் கடந்த ஜனவரி முதல் ஜூன் 18ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 426 விவசாயிகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர் . தற்கொலை செய்து கொண்ட 426 விவசாயிகளில், 257 வழக்குகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இழப்பீடு கேட்டு விண்ணப்பித்த 55 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மற்ற 114 பேரின் மனுக்கள் நிலுவையில் உள்ளது எனத் தெரிவித்தார்.