
பாஸ்போர்ட்களில் இனி ஹிந்தி மொழியும் இடம்பெறும்… பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சுஷ்மா சுவராஜின் அறிவிப்பு….
பாஸ்போர்ட்களில் ஆங்கிலத்துடன் இனி இந்தி மொழியும் இடம்பெறும் என்று மத்திய வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
மத்திய அரசு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து ஹிந்தி திணிப்பில் ஈடுபட்டு வருவதாக பொதுவான குற்றச்சாடடு எழுந்துள்ளது. அண்மையில் தமிழகத்தில் மைல் கற்களில் இந்தியில் எழுதப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கர்நாடகாவில் மெட்ரோ ரயில்களில் இந்தியில் எழுதப்பட்டிருந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஓர் இயக்கமே தொடங்கப்பட்டுள்ளது. இதே போன்று கொச்சி மெட்ரோ ரயில்களில் ஹிந்தி எழுதப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இப்படி ஹிந்தி திணிப்பிற்கு தென்மாநிலங்களில் கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில் சுஷ்மா சுவராஜ் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஸ்போர்ட் சட்டம் இயற்றப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி தலைநகர் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் விழா ஒன்று நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய சுஷ்மா சுவராஜ், இந்திய பாஸ்போர்ட்களில் இனி ஆங்கில மொழியுடன் இந்தி மொழியும் இடம்பெறும் என்று தெரிவித்தார். அத்துடன் 8 வயதுக்கு உட்பட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணத்தில் 10% சதவீதம் சலுகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்..
மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு ஹிந்தி திணிப்பின் அடுத்த கட்டமா? என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்