
பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று இஸ்ரேலுக்கு புறப்பட்டு செல்கிறார். இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
முதல் இந்திய பிரதமர்
இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதனை நினைவு கொள்ளும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலில் 3 நாட்கள் சுற்றுப் பயணத்தை இன்று மேற்கொள்கிறார். அவருடன் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் உடன் செல்கின்றனர். இந்த பயணத்தின் மூலமாக இஸ்ரேலுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெயர் மோடிக்கு கிடைக்க உள்ளது. இஸ்ரேலில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது தீவிரவாதம், தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட உள்ளது.
முக்கிய ஒப்பந்தங்கள்
இதன் பின்னர் அறிவியல், விண்வெளி தொழில் நுட்பம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் அதிபர் ரூவன் ரிவ்லினை சந்தித்து மோடி பேசவுள்ளார். அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஐசக் ஹெரோசுடனான சந்திப்பும் மோடியின் பயண திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக மோடியும் நெதன்யாஹுவும் ஐநா சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
வரலாற்று முக்கியத்துவம்
மோடியின் வருகை குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு கூறுகையில், எனது நண்பரும், இந்திய பிரதமருமான மோடி நம் நாட்டுக்கு வரவுள்ளார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் எந்தவொரு இந்திய பிரதமரும் இஸ்ரேலுக்கு வந்ததில்லை. மோடியின் பயணம் இரு நாட்டு உறவில் வலிமை ஏற்படுத்தும் என்றார்.
பாதுகாப்புத்துறை
மோடியின் பயணத்தின்போது பாதுகாப்புத்துறை தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இஸ்ரேலிடம் இருந்து அதிகமாக ஆயுதங்களை வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ.6,700 கோடி அளவுக்கு இந்தியா இஸ்ரேலிடம் இருந்து ஆயுதம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெரூசலேத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கிங் டேவிட் ஓட்டலில் மோடி தங்கவுள்ளார்.
வேளாண்மை - தொழில்நுட்பம்
மேலும், இஸ்ரேலில் மேற்கொள்ளப்படும் வேளாண்மை, நீர் மேலாண்மை, சிகிச்சைகள், நீர் சுத்திகரிப்பு உள்ளிட்டவற்றை நேரில் பார்த்து மோடி அறிந்து கொள்ளவுள்ளார். போரில் உயிர் நீத்த இந்திய வீரர்களின் நினைவாக ஹைபா நகரில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று மோடி மரியாதை செலுத்தவுள்ளார். இஸ்ரேலில் வாழும் சுமார் 4 ஆயிரம் இந்தியர்களை ஒரே நேரத்தில் மோடி சந்தித்து பேசவுள்ளார். மேலும், இஸ்ரேலில் விவசாயம், ரசாயனம், உயிரியல் உள்ளிட்ட படிப்புகளை பயிலும் மாணவர்களை சந்தித்து மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.