
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யக்கோரி தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்தோம். ஆனால், கடன் தள்ளுபடி செய்து அடுத்தவருக்கு கிடைக்க வேண்டிய பெருமையை பறித்து, திருடிக் கொண்டது பா.ஜனதா. இதுதான் இன்றைய அரசியல் சித்தாந்தம் என்று சிவசேனா கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட வறட்சி, அதனால் விவசாயம் பொய்த்ததால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், வங்கிகளில் பெற்ற பயிர்கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து வந்தன. இதையடுத்து, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஆளும் பா.ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனா தொடர்ந்து வலியுறுத்த வந்தது.
இதையடுத்து, கடந்த மாதம் 30-ந் தேதி விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்வதாக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்தார்.
இது குறித்து சிவசேனா கட்சி தனது கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது-
இன்றைய சூழலில் அரசியல் என்பது, லாபம், நஷ்டங்களை கணக்குப்பார்த்து அதை மனதில் வைத்தே நடத்தப்படுகிறது. மக்களை குழப்புவதற்காகவே திட்டங்களை ஆளும் ஆட்சியாளர்கள் அறிவிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின், நாட்டில் இருந்து ஏழ்மையை விரட்டுவோம்(கரிப் ஹத்தோ) என்ற முழக்கமும், பிரதமர் மோடியின் நல்ல காலம் வருகிறது(அச்சே தின்) என்ற முழக்கமும் என்ன ஆனது? அவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறதா?
விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்காக போராடியது, குரல் கொடுத்தது ஒருதரப்பினர் ஆனால், இன்று அடுத்தவர் பெருமையை திருடி, நாளேடுகளில் ஒருபக்கம் விளம்பரம் கொடுத்து நாங்கள் தான் முடிவு எடுத்தோம் என்று கூறுகிறார்கள். அடுத்த பெருமையை திருடுவதும், பறிப்பதும்தான் அரசியல் சித்தாந்தமாக இன்றைய சூழலில் இருக்கிறது. மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியும்.
ஆளும் பா.ஜனதா அரசு, மீண்டும் ஏழை மக்களுக்கு சலுகை விலையில் மதிய உணவு அளிக்கும் திட்டமான ‘ஜுங்கா பகர் கேந்திரா’வை கொண்டு வர வேண்டும். கடந்த 90ம் ஆண்டுகளில் பா.ஜனதா-சிவசேனா அரசு ஏழைகளுக்கு ஒருரூபாய்க்கு உணவு அளித்தது.
பா.ஜனதாவினர் விருப்பப்படி இந்த திட்டத்தின் நல்ல பெயரைக் கூட எடுத்துக் கொள்ளட்டும். ஆனால், குறைந்தபட்சம் திட்டத்தின் பலன்கள் ஏழைமக்களை சென்றடையும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.