பாகிஸ்தானைவிட இந்தியாவில் முஸ்லிம்கள் நன்றாக இருக்கிறார்கள்: நிர்மலா சீதாராமன் பதில்

By SG Balan  |  First Published Apr 11, 2023, 3:26 PM IST

இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீதான வன்முறை குறித்த கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.


அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராரமன் வாஷிங்டனில் நடைபெற்ற பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ் (Peterson Institute for International Economics) நிறுவனத்தின் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசினார். அந்த நிறுவனத்தின் தலைவர் ஆதம் எஸ் போசென் எழுப்பிய வினாக்களுக்கு விடை அளித்தார். அப்போது இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் பற்றி கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதில் கூறிய நிர்மலா, "முஸ்லிம்கள் அதிக அளவில் வாழும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடு இந்தியா. இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. நீங்கள் கூறுவது உண்மை என்றால், 1947ஆம் ஆண்டு இருந்ததைவிட தற்போது முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வாறு உயர்ந்திருக்க முடியும்?" என்றார்.

Tap to resize

Latest Videos

71 ஆயிரம் பேருக்கு வேலை! பணி நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி

தொடர்ந்து பேசிய அவர், "பாகிஸ்தானில் உள்ள நிலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அங்கு சிறுபான்மையினரின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவுக்குக் குறைந்துள்ளது. சிறிய காரணங்களுக்காகவும், சொந்த பகைகளுக்காகவும் சிறுபான்மையினர் மீது மத நிந்தனைச் சட்டம் பாய்கிறது. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் உரிய விசாரணை இல்லாமலே தண்டிக்கப்படுகிறார்கள்."

"பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களைவிட இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் சிறப்பாகவே இருக்கிறார்கள். அவர்கள் சிறப்பாக தொழில் செய்கிறார்கள். குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். அவர்களின் கல்விக்காக இந்திய அரசும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது." என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

ஒரு புலியைக்கூட காணவில்லை! பந்திப்பூர் போய் ஏமாந்த பிரதமர் மோடி!

மேலும், 2014ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகுகூட, இந்திய மக்கள்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா? எந்த சமூகத்திலாவது மரணங்கள் அதிகரித்துள்ளதா? என்று கேள்வி எழுப்பிய நிதி அமைச்சர்,  இந்தியாவைப் பற்றி இதுபோன்ற கருத்துகளை உருவாக்குபவர்கள் இந்தியாவுக்கு வந்து நேரில் பார்த்து உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்கா சென்றுள்ள நிர்மலா சீதாராமன் வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் வசந்த காலக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். அத்துடன் இந்தியத் தலைமையின் கீழ் நடைபெறும் இரண்டாவது ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்க உள்ளார்.

திருப்பதி கோயிலுக்கு 250 ஏக்கர் விவசாய நிலம் நன்கொடை அளித்த பக்தர்

click me!