
`காது அல்லது மூக்கினுள் எதாவது பொருளை போட்டுக் கொண்டால் உடனே செய்ய வேண்டியவை:
காதுக்குள் ஏதாவது பொருள் போய்விட்டால் எடுக்க முயற்சிக்க வேண்டாம். குச்சி, ‘பட்ஸ்’ போன்றவற்றால் எடுக்க முயற்சித்தால், செவிப்பறை பாதிப்படைய வாய்ப்பு உண்டு. அதனால் காது கேட்காமலே கூடப் போய்விடலாம்.
எனவே, உடனே காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் போய்விடுவது நல்லது.
காதுக்குள் ஏதேனும் பூச்சி போய்விட்டால், டர்பன்டைன் எண்ணெய் சில துளிகள் விடலாம். பூச்சி இறந்துவிடும். பிறகு அதுவே வெளியே வரவில்லை எனில், மருத்துவரிடம் போய் எடுத்துவிட வேண்டும்.
குழந்தைகள் விளையாடும்போது, ஏதேனும் சிறு மணிகள் அல்லது சிறு பயறுகள் போன்றவை மூக்கினுள் போய்விடக்கூடும். சில பெண்கள் மூக்குத்தியைக் கழற்றும்போது, திருகாணி கூடப் போய்விட வாய்ப்பு உண்டு.
அப்படிப் போய்விட்டால், ‘அதை எடுக்கிறேன்’ என்று அந்தப் பொருளை இன்னும் கொஞ்சம் உள்ளே தள்ளி, ‘எமர்ஜென்சி’ ஆக்கிவிடாமல், உடனடியாக மருத்துவரிடம் போவது நல்லது.