எதிர்பாராமல் ஏற்படும் சில பிரச்சனைகளும் அவற்றிற்கான உடனடி தீர்வுகளும்…

First Published Oct 31, 2017, 1:36 PM IST
Highlights
Some unexpected problems and their immediate solutions ...


இரத்தக் கசிவு

சிறிய காயம், கத்தி அல்லது பிளேடால் ஏற்பட்ட வெட்டுக் காயம், கீழே விழுந்து அடிபட்டது என ரத்தக் கசிவு எப்படி ஏற்பட்டாலும், எங்கிருந்து ரத்தம் வருகிறது என்பதை முதலில் கண்டறிந்து, ரத்தம் வருவதை நிறுத்த வேண்டும்.

வாய், மூக்கு, கை, கால், நெற்றி என எங்கிருந்து ரத்தம் வந்தாலும் சுத்தமான துணியைவைத்து அழுத்தி, ரத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ஒருவேளை ரத்தம் மூக்கிலிருந்து வந்தால், அவரை முன்னோக்கிக் குனியச்செய்து, மூக்கின் மென்மையான முன்பகுதியை, விரல்களால் பிடித்துக் கொண்டு, வாயால் மூச்சுவிடச் செய்ய வேண்டும்.

மூக்கிலிருந்து வரும் ரத்தத்தை அவர் விழுங்கிவிடக் கூடாது. அதனால்தான் முன்னால் குனியச் சொல்கிறோம். தலையைப் பின்பக்கமாக சாய்த்துவிடக் கூடாது. அப்படி சாய்த்தால், ரத்தம் வாய்க்குள் போய், நுரையீரலுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே நிமிரவே கூடாது. மூக்கு சிந்தச் செய்யவும் கூடாது.

காதிலிருந்து ரத்தம் கசிந்தால், சுத்தமான துணியைவைத்து ரத்தத்தை நிறுத்த வேண்டும். காதுக்குள் எதையும் போட்டுக் குடையக் கூடாது.

வெட்டுப்படுதல்

கை, கால் விரல் அல்லது கை போன்ற உறுப்புகள் ஏதேனும் விபத்தில் துண்டிக்கப்பட்டுவிட்டால், துண்டிக்கப்பட்ட உறுப்பை, சுத்தமான ஈரத்துணியில் சுற்றி, ஒரு பாலித்தீன் கவரில் போட்டு, அதை ஐஸ்கட்டிகள் நிரம்பிய பெட்டியில் போட்டு உடனடியாக மருத்துவமனைக்கு, பாதிக்கப்பட்டவருடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, துண்டிக்கப்பட்ட உறுப்பை நேரடியாக ஐஸ்கட்டிகளுக்குள் போடக் கூடாது.

சுற்றிலும் ஐஸ் இருக்கும் பையில் வைத்து, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டுசெல்ல வேண்டும்.

இரத்தக்காயம்

குழந்தைகள் விளையாடும்போதும் சாதாரணமாக நடக்கும்போதும் கீழே விழுந்து அடிபடுவதும் இரத்தம் வருவதும் இயல்பே. அப்போது, காயம்பட்ட இடத்தை, குழாயிலிருந்து வரும் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். சோப்பு போட்டுக் கூடக் கழுவலாம்.

காயம்பட்ட இடத்தில் ரத்தம் வந்தால், சுத்தமான துணியால் அழுத்திக் கட்டுப்போட வேண்டும். பவுடர், சந்தனம், மஞ்சள், காப்பித் தூள் என்று எந்தப் பொருளையும் காயத்தின் மீது போடக் கூடாது.

குழந்தைகளுக்கு உடலில் வலுக்குறைவு என்பதால், வெட்டுக்காயம், பூச்சிக்கடி போன்ற என்ற விபத்தாக இருந்தாலும், அவர்களால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே முதல் உதவிக்குப் பிறகு, உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது.

click me!