
நெஞ்சு வலி போன்ற மிகத் தீவிரமான பாதிப்பு ஏற்படும்போது, ‘கோல்டன் ஹவர்ஸ்’ எனப்படும் அந்தச் சில மணித் துளிகளுக்குள் மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்குள், அவருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், முதல் உதவி செய்யப்பட வேண்டும்.
முதல் உதவியின் முக்கியமான அடிப்படைக் கொள்கைகள் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
இவை எல்லா அவசர சிகிச்சைகளுக்குமே பொதுவான விதிகள்.
விதி எண் 1:
பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ… நம்மால் எந்த ஊறும் நேர்ந்துவிடக் கூடாது. ‘உதவி செய்கிறோம்’ என்று போய், நம்மை அறியாமல் அவர்களுக்கு எந்தக் கூடுதல் கஷ்டத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது. சாதாரண எலும்பு முறிவாக இருந்தது, கூட்டு எலும்பு முறிவாக மாறிவிட நாமே காரணமாக இருந்துவிடக் கூடாது.
உதாரணம்:
ஒரு வாகன விபத்தில் அடிபட்டவரின் ஹெல்மெட்டைக் கழற்றும்போது கூட, மிக மிகக் கவனமாகக் கழற்ற வேண்டும். ஏனெனில், கழுத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல், நிலையாக இருப்பது முக்கியம். அதேபோல் கட்டடத்தின் உயரத்திலிருந்து ஒருவர் விழுந்துவிட்டால், அவரைத் தூக்கும்போது கழுத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
விதி எண் 2:
பாதுகாப்பு மிக முக்கியம். எந்த ஒரு அவசரகட்டத்திலும் மூன்று நபர்கள் இருப்பார்கள். அதாவது, பாதிக்கப்பட்டவர், உதவச் செல்லும் நாம், நமக்கு அருகில் இருப்பவர்கள்… இந்த மூன்று பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
விதி எண் 3:
பொது அறிவு முக்கியமாகத் தேவை. அங்கே உடனடியாகக் கிடைக்கும் அல்லது இருக்கும் வசதிகளைவைத்து எப்படி உதவலாம் என்ற சமயோசித புத்தியுடன் சாமர்த்தியமாகச் செயல்படும் வேகமும் வேண்டும்.