மாரடைப்புக்கும், இதயத் துடிப்பு முடக்கத்திற்கும் என்ன வித்தியாசம். இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க…

Asianet News Tamil  
Published : Sep 16, 2017, 11:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
மாரடைப்புக்கும், இதயத் துடிப்பு முடக்கத்திற்கும் என்ன வித்தியாசம். இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க…

சுருக்கம்

What is the difference between heart attacks and cardiac arest

மாரடைப்பு

இதயத் தசைக்கு ரத்தம் செல்லும் பிரத்யேக கரோனரி ரத்தக்குழாய்களில், அடைப்பு ஏற்பட்டு, இதயத் தசைக்கு ரத்தம் செல்வதில் தடை ஏற்படுவதைத்தான் மாரடைப்பு (Heart Attack) என்கிறோம்.

இதயத்துக்கான ரத்த ஓட்டம் தடைப்படுவதால், கொஞ்சம் கொஞ்சமாக இதய செல்கள் உயிரிழக்கின்றன. சிகிச்சை அளித்து இதை சரி செய்யாவிடில், கடைசியில் இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட்டு, நிரந்தரமாக இதயம் நின்றுவிடும்.

மாரடைப்பு ஏற்பட்ட எல்லோருக்கும், உடனடியாக இதயத் துடிப்பு முடக்கம் ஏற்படும் எனச் சொல்லமுடியாது. ஒவ்வொருவருக்கும், அவரது உடல்நிலையை பொறுத்து மாறுபடும்.

இப்படிதான் அறிந்து கொள்ளணும்

மாரடைப்பு ஏற்படும் போது முதலில் நெஞ்சு பகுதியில் ஒரு விதமான பாரம் ஏற்படுவது போல தோன்றும். மார்பின் நடுப்பகுதியில் நெஞ்சு எலும்புக்கு பின் பகுதியில் வலி ஏற்படும். இதனை ‘மார்பு இறுக்கம்’ எனச் சொல்வார்கள்.

இது முக்கியமான அறிகுறி. பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு, சுய நினைவு இருக்கும், தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர முடியும்.

இடது தோளில் ஆரம்பித்து, கழுத்து, தாடை, முதுகு, இடது கை பகுதிகளில் வலி பரவும். வியர்த்துக் கொட்டி, மூச்சு வாங்கும். இதை வைத்தே தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என ஒருவர் சந்தேகப்பட முடியும்.

ஒரு சிலருக்கு மார்பு இறுக்கத்துடன், தலைச்சுற்றல், பதற்றம், வாந்தி, மயக்கம், சீரற்ற இதயத்துடிப்பு போன்றவை ஏற்படலாம்.

என்ன செய்யணும்

மாரடைப்பு வரும் அறிகுறி இருப்பவர்களுக்கு, ஆஸ்பிரின், டிஸ்பிரின் முதலான மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மாத்திரையை விழுங்கும் வடிவத்திலும் உதட்டுக்குள் வைக்கும் முறையிலும் இவை மருந்தகங்களில் கிடைக்கின்றன.

மாரடைப்பு ஏற்படும் சமயங்களில், இந்த மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் தனக்குத் தானே முதலுதவி செய்து கொள்ளலாம். பின்னர் உடனடியாக, இதய அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு வசதி உள்ள மருத்துவமனைக்கு சென்றால், மருத்துவர்கள் முதலுதவி மற்றும் சிகிச்சைகளை அளித்து நோயாளியை காப்பாற்ற முடியும்.

மாரடைப்பு வந்த பின்னர் எவ்வளவு விரைவில் மருத்துவமனை செல்கிறோமோ அந்த அளவுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். எதனால் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அதற்கான சிகிச்சைகள் (ஆஞ்சியோ கிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, இதய அறுவை சிகிச்சைகள்) மேற்கொள்ளப்படும்.

இதயத் துடிப்பு முடக்கம்

‘திடீர் இதயத் துடிப்பு முடக்கம்’ என இதைச் சொல்லலாம். எந்த வித அறிகுறிகளும் இல்லாமலும்கூட இது வரலாம். இதயம், சீரான இடைவெளியில் துடிக்க மின்னோட்டம் உள்ளது. சீரான எலெக்ட்ரிக் பல்ஸ் இருக்கும்போது, இதயம் சரியாக ரத்தத்தை பம்ப் செய்யும்.

‘அரித்மியா’ உள்ளிட்ட சில பிரச்னைகளால் எலக்ட்ரிக் பல்ஸ் திடீரென தாறுமாறாக மாறினால், சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படும். இவ்வாறு ஏற்படுவதற்கு பல காரணிகள் உண்டு. அதில் ஒரு மிக முக்கிய காரணிதான், மாரடைப்பு. தூக்கத்தில் சிலர் இறந்து விடுவதை மாரடைப்பு வந்து இறந்தவர்கள் எனச் சொல்வார்கள்.

இது தவறு. தூக்கத்தில், உடலில் என்ன நடக்கிறது எனத் தெரியாமலேயே ஒருவர் இறந்தால் அவருக்கு சடன் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டிருக்கக்கூடும்.

உடன் கார்டியாக் அர்ரெஸ்ட் வந்தால்

ஒருவருக்கு கார்டியாக் அரெஸ்ட் வந்த பின்னர், முதலுதவி தராமல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 10 சதவிகிதம் அளவுக்கு குறைகிறது. ‘சி.பி.ஆர்’ எனச் சொல்லப்படும் முதலுதவி தருவதன் மூலமாக இவர்களின் உயிரை காப்பாற்றும் வாய்ப்பு இருக்கிறது.

மேலை நாடுகளில் இந்த செயல்முறையை விளக்க, வகுப்புகள் அமைத்து பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்தச் செயல்முறை இன்னும் சரியாக மக்களுக்கு தெரிவதுஇல்லை.

முதலுதவி கொடுத்து உயிர் பிழைக்க வைத்த பின்னர், உடனடியாக எதனால் சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்திருக்கிறது என பார்க்க வேண்டும், ஒரு வேளை இதய நோய்கள் காரணமாக ஏற்பட்டிருந்தால் அதற்குரிய சிகிச்சைகளை தொடர வேண்டும்.

மாரடைப்பு காரணமாக இருந்தால், அதற்கான சிகிச்சையைச் செய்ய வேண்டும். சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்து உயிர் பிழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சி.பி.ஆர் முதலுதவி

சி.பி.ஆர் என்பது இதயத்துக்குச் செயற்கையாக உயிரூட்டல். பாதிக்கப்பட்டவரை ஒரு சமதளத்தில் உடனடியாகப் படுக்கவைக்க வேண்டும். அவரது சட்டை பட்டன்களை அவிழ்த்து, நெஞ்சின் மையப்பகுதியின் மீது, வலது அல்லது இடது உள்ளங்கையின் தடிமனான அடிப்பகுதியை வைக்க வேண்டும்.

இன்னொரு கையை அந்தக் கையின் மேல் வைத்து, ஐந்து விரல்களுக்கு நடுவில் பிடிமானம் போல் பிடித்தபடி இறுக்கமாகக் கோத்துக்கொள்ள வேண்டும். இப்போது, பாதிக்கப்பட்டவரின் நெஞ்சில் சுமார் ஐந்து செ.மீ ஆழத்துக்கு வேகமாக அழுத்தம் கொடுத்து கொடுத்து, எடுக்க வேண்டும். அதாவது, ஒரு நிமிடத்துக்கு 100 முதல் 120 முறை இப்படி அழுத்தம் கொடுத்து ரிலீஸ் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் உணர்வு வரும் வரையிலோ அல்லது அவசரஉதவிப் பிரிவில் பணியாற்றும் மருத்துவக் குழுவினர் வரும் வரையிலோ உங்களுக்குக் கடும் சோர்வு ஏற்படும் வரையிலோ, இந்த முதலுதவியைச் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்குச் பக்கவாட்டில் அமர்ந்துதான் இந்த முதலுதவியைச் செய்ய வேண்டும். மருத்துவமனையில் நோயாளிக்கு டீஃபிப்ரிலேஷன் (Defibrillation) என்ற சிகிச்சை அளிக்கப்படும். அதாவது, நெஞ்சுப் பகுதியில் மின்சாரத்தை செலுத்தி மீண்டும் இதயத்தை செயல்படத் தூண்டும் சிகிச்சை இது.

 

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake