நீண்ட நேரம் ஒரே நிலையில் நிற்கும்போது, பெரும்பாலானோருக்கு உள்ளங்காலில் உணர்வின்மை ஏற்படும். உடலில் ரத்த ஓட்டம் குறையும் போது, இத்தகைய பிரச்னை நேரிடுகிறது. அதற்கான வைத்திய முறைகளை தெரிந்துகொள்வோம்.
சில சமயம் அதிக நேரம் தரையில் அமர்ந்தால், எழுவதற்குப் போராட வேண்டியிருக்கும். திடீரென உள்ளங்கால் அல்லது பாதங்களில் மரத்துப் போவதால் ஏற்படும் விளைவு தான் அது. இது ஜோமு கேட்ச் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நமது உடலில் உள்ள நரம்புகள் மூளை மற்றும் முதுகு தண்டுவடத்திற்கு சரியாக ரத்தம் செல்லவில்லை என்றால் இப்படி நடக்கும். கொஞ்ச நேரத்தில் எழுந்து நடந்தால், தானே சரியாகி விடும். உங்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் இந்த பிரச்சனையை தீர்க்க சில வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. அதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.
இதுதான் காரணம்
ஒருபுறம் நீண்ட நேரம் அசாதாரண நிலையில் அமர்ந்திருப்பதும் இந்த வகையான உணர்வின்மையை ஏற்படுத்தும். உடல் எடையைத் தாங்கிக் கொண்டு, ஒற்றைக் காலில் நிற்கும் போது காலின் நரம்புகளில் அதிக அழுத்தம் இருக்கும். அதன் காரணமாகவும் இந்தப் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில சமயங்களில் வைட்டமின் பி12 குறைபாட்டால் கூட இந்த பிரச்னை வரும். அதிகம் புகைப்பிடிப்பவராகவும், குடிப்பவராகவும் இருந்தால் கூட அடிக்கடி கால்கள் மரத்துப் போகும். சர்க்கரை நோயை பெரிய அளவில் கட்டுப்படுத்தாவிட்டாலும் பிரச்னை வர வாய்ப்புள்ளது,
வீட்டு வைத்திய முறைகள்
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால், கால்களில் உள்ள நரம்புகள் வலுவிழந்து, அதனால் உணர்வின்மை பிரச்சனை தோன்றும்.திடீரென்று இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், உடனடியாக இரண்டு கால்களையும் வெதுவெதுப்பான நீரில் பத்து நிமிடம் ஊற வைக்கவும். அதன்மூலம் உணர்வு பழையநிலைக்கு திரும்பும்.
மெனோபாஸ் ஏற்படும் போது பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறை..!!
எண்ணெய் மசாஜ்
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை சிறிது வெதுவெதுப்பாக இருக்கும் வரை சூடாக்கி, பாதங்களில் ஒரு ஐந்து நிமிடம் நன்றாக மசாஜ் செய்தால், பாதங்களில் ஏற்படும் உணர்வின்மை பிரச்சனை மிக விரைவில் குணமாகும். இரவில் படுக்கும் முன், இரண்டு டேபிள் ஸ்பூன் வீட்டில் செய்த நெய்யை சூடாக்கி, வெதுவெதுப்பான நிலையில் உள்ளங்காலில் தடவவும். இப்படி தினமும் செய்து வந்தால், கால்களில் ஏற்படும் உணர்வின்மை பிரச்சனை தீரும்.
சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு
உங்களுக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் இருந்தால், சரியான உணவைப் பின்பற்றி, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தவறவிடாமல் எடுத்து வாருங்கள். ஏனெனில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடில்லாமல் போனால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை ஏற்பட்டு இந்த உணர்வின்மை பிரச்சனை ஏற்படுகிறது.
சிற்றுண்டிகளுக்கு முன்னும் பின்னும் உங்கள் சர்க்கரை அளவை சரிபார்க்கவும். எக்காரணம் கொண்டும் சர்க்கரை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவும். சர்க்கரையை சமநிலையில் வைத்திருந்தால், இந்த உணர்வின்மை பிரச்சனையை கட்டுப்படுத்தலாம்.