சக்கரவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் உள்ளன. இதிலிருக்கும் வைட்டமின் பி6 ஊட்டச்சத்து மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது.
தமிழ்நாட்டில் சாதாரணமாகக் கிடைக்கும் சக்கரவள்ளிக் கிழங்கில் பலருக்கும் தெரியாத ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. இது பெயருக்கு ஏற்றார் போல இனிப்புச் சுவை கொண்டது. சக்கரவள்ளிக் கிழங்கில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆண்டி ஆக்சிடண்டுகள் அதிகளவில் உள்ளன. அதன்காரணமாக மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் பெரிதும் குறைகிறது. சக்கரவள்ளிக் கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி
சக்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அவற்றில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே உங்களுடைய உணவுப் பழக்கத்தில் அவ்வப்போது இக்கிழங்கை சேர்த்து வருவது நல்ல பலனை தரும்.
நீரிழிவு பாதிப்பு குறையும்
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட பலரும் சக்கரவள்ளிக் கிழங்கை தவிர்க்கின்றனர். ஆனால் சக்கரை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. சக்கரவள்ளிக் கிழங்கில் கிளைசெமிக் குறியீட்டு நிறைந்திருப்பதால், பல்வேறு உடல்நல பயன்கள் கிடைக்கின்றன. மேலும் இதில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால், சக்கரை நோயைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
பழைய வெல்லத்துக்கு மதிப்பு மிக அதிகம்- தெரியுமா உங்களுக்கு..??
கண் ஆரோக்கியத்துக்கு நல்லது
வைட்டமின் ஏ நிறைந்த சக்கரைவள்ளிக் கிழங்கு கண் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அதனால் முதுமையால் ஏற்படும் பார்வைக் கோளாறுக்கு இது மிகவும் நன்மையை தருகிறது. அதேபோல நார்ச்சத்து நிறைந்த சக்கரைவள்ளிக் கிழங்கு செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க இனிப்புக் கிழங்கை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வெறும் 100 கிராம் கொண்ட சக்கரைவள்ளிக் கிழங்கில் 86 கலோரிகள் மட்டுமே உள்ளன. மேலும், புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால், இது உடல் எடையை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.