குளிர்காலத்திலும் வியர்த்துக் கொட்டுகிறதா? அலட்சியம் வேண்டாம் ஆண்களே..!!

By Dinesh TG  |  First Published Nov 19, 2022, 10:25 PM IST

உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது மிகவும் இயற்கையானது. அதிகப்படியான வேலை மற்றும் உடல்சார்ந்த செயல்பாடுகள் இருக்கும் போது, அளவுக்கு அதிகமாக வியர்க்கும். ஆனால் ஒருசிலருக்கு எலும்பை உறைய வைக்கும் குளிரிலும் கூட வியர்கும். அதற்கு காரணம் இந்த பிரச்னையாகவும் இருக்கலாம்.
 


உடல் மிகவும் சோர்வடைந்து வியர்வை வெளியேறினால்தான், உடல்நலன் நன்றாக உள்ளது என்று அர்த்தம். வியர்வை நம் உடலில் இருந்து வெளியேறும் போதுதான் வெப்பநிலை கட்டுப்படுத்தப்படுகிறது. அப்போது, உடலில் இருக்கும் நச்சுப்பொருட்கள், உடலில் இருந்து வெளியேறிவிடுகிறது. நீங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது, வெயிலில் அதிக நேரம் செலவிடும்போது வியர்வை ஏற்படுகிறது. அதனால் உங்களுடைய உடல் சுத்திகரிக்கப்படுகிறது. எனினும் சிலருக்கு குளிர் காலத்திலும் வியர்க்கும். குளிர்காலத்தில் வியர்க்க பல காரணங்கள் உள்ளன. இது சில தீவிர நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சராசரி உடல் வெப்பநிலை 98 முதல் 98.8 பாரன்ஹீட் வரை இருப்பது சாதாரணமாகக் கருதப்படுகிறது. உடல் வெப்பநிலை 100க்கு மேல் இருந்தால் அது காய்ச்சல் எனப்படும். இதுதொடரும்பட்சத்தில் பல்வேறு தீவிர நோய்க்கான அறிகுறியாகவே புரிந்துகொள்ள முடியும்.

குறைந்த இரத்த அழுத்தம்

Tap to resize

Latest Videos

குளிர்காலத்தில் கூட வியர்த்தல் குறைந்த இரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். குறைந்த இரத்த அழுத்தம் மாரடைப்புக்கு வழிவகுக்கும். குளிர்ந்த காலநிலையில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால், இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளில் கால்சியத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது. விளைவு வியர்வை. இதை கவனிக்காமல் விட்டால், இதயத் துடிப்பும் திடீரென அதிகரிக்கிறது. வியர்வையுடன் இதயத்துடிப்பும் அதிகமாகி மாரடைப்பு ஏற்பட காரணமாகிவிடுகிறது.

ஹைப்பர்ஹைட்ரோசிஸ்

இதுவும் ஒரு நோய் தான். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக வியர்க்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தநேரத்திலும் வியர்வையால் குளித்தபடியே இருப்பார்கள். இந்த நோயில், நோயாளியின் முகம் மற்றும் உள்ளங்கைகள் மற்றும் கால்களில் அதிக வியர்வை சுரக்கும். உடல் வெப்பநிலையை சீராக்க வியர்வை அவசியம். ஆனால் உள்ளங்கைகள் மற்றும் பாதங்கள் அதிக அளவில் வியர்த்துக் கொண்டிருந்தால், அவர் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று பொருள். 

குறைந்த சர்க்கரை அளவு

நமது உடலில் சர்க்கரை அளவு சரியாக இருப்பது மிகவும் அவசியம். அதிகமாக இருந்தால் பிரச்சனை. அதுவே குறைந்தாலும் பிரச்னை தான். நம் உடலில் சர்க்கரை அளவு குறைந்தாலும் நமக்கு வியர்வை அதிகமாகும். வெறும் வயிற்றில் 1 டெசிலிட்டர் இரத்தத்தில் 70 முதல் 100 மி.கி சர்க்கரை ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. சர்க்கரை அளவு இதை விட குறைவாக இருப்பவர்களுக்கு, உடலில் வியர்வை அதிகளவில் சுரக்கும். 

தேநீர் அருந்தியதும் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்..? அப்போது உங்களுக்காக தான் இந்த பதிவு..!!

மாதவிடாய் பிரச்னை

40 வயதிற்குப் பிறகு பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வாய்ப்புகள் அதிகம். சில பெண்களுக்கு 40 வயதில் மாதவிடாய் நிற்கும், சில பெண்களுக்கு 50 வயதிற்குப் பிறகும் மாதவிடாய் தொடர்கிறது. எனினும் மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்களுக்கு அதிகமாக வியர்க்கிறது. அதேபோன்று, 40 வயதுக்கு மேல் மாதவிடாய் தொடரும் பெண்களுக்கு வியர்வை அதிகளவில் வெளியேறும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு குளிர்காலத்திலும் வியர்வை அருவியாக கொட்டும் என்று கூறப்படுகிறது. அதேபோன்று பருமனானவர்களுக்கு குளிர்காலத்திலும் வியர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக மருத்துவர்கள் பலர் கூறுவது என்னவென்றால், குளிர்காலத்தில் அதிக வியர்வை நம் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவை பாதிக்கிறது. பொதுவாக குளிர்காலத்தில் அனைவரும் சூடான உணவை உண்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் சூடான உணவை உண்ணும்போது வியர்ப்பது இயல்பானது. இதுபோன்று வியர்த்துக் கொட்டுவதனால் பெரிய பாதிப்புகள் கிடையாது. இப்படி சில விஷயங்கள் இல்லாமல், காரணமே இல்லாமல் உங்களுக்கு வியர்த்துக் கொட்டினால் உடனடியாக மருத்துவரை சென்று சந்தியுங்கள். குளிர்காலத்தில் ஏற்படும் வியர்வைக்கு மருத்துவ உலகம் பல்வேறு காரணங்களுடன் அணுகும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
 

click me!