இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் யாரும் முதுகை வளைத்து வேலைப்பார்ப்பது கிடையாது. இன்றுள்ள தேவைகளை பூர்த்திசெய்ய பெரியளவில் கஷ்டப்பட வேண்டிய அவசியமே கிடையாது. விரும்பும் எதுவும் ஆர்டர் செய்தால் கைக்கு கிடைக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
நம்முடைய வாழ்க்கைமுறை உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுகிறது. நம்மில் நிறையபேர் உட்கார்ந்து வேலை செய்கிறோம். இது இப்போது ஓய்வாக தோன்றினாலும், எதிர்காலத்தில் இதனால் பெரும் பிரச்னைகள் ஏற்படும். தினமும் அதிகநேரம் அமர்ந்தபடியே வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? அதிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது எப்படி? உள்ளிட்ட விவரங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
தினமும் உட்கார்ந்துக் கொண்டே வேலை செய்பவர்களுக்கு சக்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 114 சதவீதம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோன்று அவர்களுக்கு 147 சதவீதம் இருதய நோய் பாதிப்புகள் வரக்கூடும் எனவும், அதில் 90 சதவீதம் பேர் இறக்கும் வரையிலான அவஸ்தைகளை அனுபவித்தாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நீண்ட நேரம் உட்கார்ந்து பணி செய்பவர்களுக்கு வளர்ச்சி குன்றிய நிலை, முதுகுவலி, தசைப்பிடிப்பு, தசைகளின் விறைப்பு மற்றும் தளர்வு, நீரிழிவு நோய், இதயக் கோளாறுகள், சில புற்றுநோய்கள் மற்றும் இரத்தக் குழாய் பாதிப்பு போன்ற பல்வேறு தீவிர நோய்களும் ஏற்படுகின்றன. மேலும் ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பது மன அழுத்த பிரச்சனைகள் மற்றும் மறதியை கூட ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தடுப்பது எப்படி?
இப்போதெல்லாம் பெரும்பாலான வேலைகளை மடிக்கணினியில் அமர்ந்தபடியே செய்து முடித்துவிடுகிறோம். நாம் எவ்வளவு அதிகமாக உட்காருகிறோமோ, அவ்வளவு ஆபத்தானது. வேலையை மாற்ற முடியாது தான். அதற்காக உங்கள் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டாம் என்கிற அவசியமில்லை. குறிப்பாக 4 வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உட்கார்ந்து பணி செய்வதால் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ளலாம்.
அவ்வப்போது எழுந்து நடங்கள்
நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது போல தோன்றினால், உடனடியாக எழுந்து கையையும் காலையும் வீசி நடக்க தொடங்கிடுங்கள். அதிக நேரம் உட்கார்ந்துவிட்டு, திடீரென எழுந்து நடப்பதால் எதுவும் பயனில்லை. நடக்கும் போது மொத்த உடல் இயக்கமும் சரியாக இருக்க வேண்டும். அதனால் தான் கையையும் காலையும் வீசி நன்றாக நடக்க வேண்டும். அதேபோன்று வேலை செய்யும் போது, கவனச்சிதறல்கள் அடைய வேண்டாம். இது உங்களை எழுந்து நடப்பதில் இருந்து தடுத்துவிடும்.
இடை இடையில் ஓய்வு தேவை
இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், அரைமணிநேரத்துக்கு ஒருமுறை நாம் நமக்கு உட்காருவதில் இருந்து ஓய்வு அளிக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அப்போது இருக்கையில் இருந்து எழுந்து குறைந்தது 3 நிமிடங்கள் வரை ஏதேனும் நின்றுகொண்டே வேலை செய்யலாம். ஆரம்பத்தில் போன் பேசுவது அல்லது பார்ப்பது போன்ற வேலைகளை நடந்துகொண்டே செய்யுங்கள். ஒருவேளை நீங்கள் அலுவலகத்தில் இருந்தால், லிஃப்ட் பயன்படுத்தாமல் 50 படிக்கட்டுக்களில் இறங்கி ஏறி வாருங்கள்.
குளிர்காலத்திலும் வியர்த்துக் கொட்டுகிறதா? அலட்சியம் வேண்டாம் ஆண்களே..!!
உடற்பயிற்சி அவசியமானது
நாம் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது ஒட்டுமொத்த உடலுக்குமே மிகவும் நன்மையாகும். அதனால் தினசரி காலை அல்லது மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக வைத்துக்கொள்ளுங்கள். தினமும் நடை பயிற்சிக்கு செல்லுங்கள், அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உடற்பயிற்சி செய்ய பழகுங்கள். இது உங்களுக்கு புத்துணர்ச்சியை தரும். மேலும், உங்களை எப்போதும் ஆற்றல் அதிகரிக்கும்.
சீராக அமர்ந்து செயல்படுங்கள்
பலருக்கும் உட்காருவதிலே மிகுந்த பிரச்னை உள்ளது. நீண்ட நேரம் உட்கார்ந்து பணி செய்வதை விடவும், சீராக உட்கார முடியாமல் அவதிப்படுவர்களுக்கு தான் நிறைய நோய்கள் ஏற்படுகின்றன. தரையில் அமர்ந்தாலும் இருக்கையில் அமர்ந்தாலும், நமது உடல் 90 டிகிரி அளவில் இருக்க வேண்டும். கணினி முன்பு பணி செய்தால் நேராக அமரவேண்டும். கழுத்தை நேராகவும், தோள்பட்டைகளை தளர்வாகவும் வைத்து பணி செய்ய வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உட்கார்ந்து பணி செய்வதால் ஏற்படும் பிரச்னைகளை தடுக்கலாம்.