சானிட்டரி பேடுகளால் புற்றுநோய் ஆபத்து- அதற்கு மாற்று வேறு என்ன..??

By Dinesh TGFirst Published Nov 27, 2022, 9:56 AM IST
Highlights

சானிட்டரி பேட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் இயற்கையான வழிகளில் மாதவிடாய் பிரச்னைக்கு தீர்வுகாண பெண்கள் முயன்று வருகின்றனர்.
 

பொதுவாக மாதவிடாய் ஏற்படும் பெண்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் சானிட்டர் பேடுகளை தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவற்றில் இருக்கும் ரசாயனங்கள், வாசனை திரவியங்கள் போன்றவை சருமத்திற்கு தீங்கு விளைவிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருசில நேரங்களில் அவை புற்றுநோய் பாதிப்புக்கும் வழிவகுப்பதாக எச்சரிக்கப்படுகிறது. சமீபத்தில் இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் குறிப்பிட்ட சானிட்டரி பேடுகளால், இந்தியாவில் பெண்கள் பலர் புற்றுநோய்க்கும் மற்றும் மலட்டுத்தன்மைக்கும் ஆளாவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இரண்டு சானிட்டரி பேட்களில் ஆறு வகையான பித்தலேட்டுகள் என்கிற ரசாயனம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் உடல்நலத்துக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பித்தலேட் என்றால் என்ன?

சானிட்டரி நாப்கின்கள் உட்பட பல்வேறு தயாரிப்புகளில் பித்தலேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவொரு பிளாஸ்டிசைசர் ரசாயனம் ஆகும். இது நாப்கின்களுக்கு மென்மையையும் நெகிழ்வையும் வழங்குகின்றன. மேலும் தோலுடன் உராய்வு ஏற்படுவதையும் இது தடுக்கிறது. அதனால் சானிட்டரி நாப்கின் தயாரிப்பில் பித்திலேட் என்கிற பிளாஸ்டிசைசர் முக்கிய ரசாயனமாக உள்ளது.

டம்பான்ஸ்

சானிட்டரி பேட்களுக்குப் பதிலாக பரவலாகக் கிடைக்கும் பொருட்களில் ஒன்று டம்பான்ஸ். இது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதானது மற்றும் பாதுகாப்பானது. நம்முடைய கைப்பையில் எளிதாக இதை வைத்துக்கொள்ளலாம். பெரியளவில் இடவசதி எதுவும் தேவையில்லை. டாம்பான்களை பயன்படுத்தும் போது கசிவுகள் இருக்காது, அதேபோன்று தடிப்புகளும் ஏற்படாது. இதை அணிந்துகொண்டு எல்லாவிதமான செயல்களிலும் ஈடுபடலாம். எனினும், இதை எட்டு மணி நேரத்திற்கும் மேலாக பெண்கள் பயன்படுத்தக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். டம்பான்ஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துவதற்கு ஏற்ப பல்வேறு அளவுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மாதவிடாய் கப்

இந்தியாவில் தற்போதைய காலத்தில் இம்முறை பிரபலமாகி வருகிறது. சானிட்டரி பேட்களுக்கு மற்றொரு வசதியான மாற்றாக பலராலும் சானிட்டரி கப் முன்வைக்கப்படுகிறது. மாதவிடாய் இரத்தம் கசிவதைத் தடுக்க இதை பிறப்புறுப்புக்குள் செருக வேண்டும். இது உங்களுடைய உறுப்புக்குள் இருப்பது போன்ற உணர்வையும் தராது. இந்த மாதவிடாய் கப்பை அவ்வப்போது அகற்றி சுடு தண்ணீரில் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த கேடும் ஏற்படாது. ஒரு சானிட்டரி நாப்கினுடன் ஒப்பிடும்போது மாதவிடாய் கப்பை 12 மணிவரை பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோன்று ஒரு கப்பை முறையாக பயன்படுத்தி வருவதன் மூலம் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

துவைக்கக்கூடிய காட்டன் பேடுகள்

துவைக்கக்கூடிய மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய காட்டன் பேட்கள் பல சந்தைகளில் கிடைக்கின்றன. இதை சுகாதாரமான முறையில் சுத்தம் செய்து தொடர்ந்து பயன்படுத்தி வரலாம். வயதுக்கு ஏற்ப பல்வேறு வடிவங்கள் மற்றும் தடிமனிலும் இது விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த துணி பேடுகளில் எந்த ரசாயனமும் இருப்பது கிடையாது. இதை பயன்படுத்துவதால் சொறி அல்லது பிற பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுகளை ஏற்படுத்தாது என்பதை நினைவில் கொள்ளவும்.

வீட்டு வைத்தியம் மூலம் தலைவலியை ஓட.... ஓட... விரட்டும் 5 வழிமுறைகள்..!

பீரியட் பேண்டீஸ்

இது மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக்கூடிய சிறப்பு உள்ளாடைகள் ஆகும். சானிட்டரி பேட்களுக்கு சிறந்த மாற்றுகளில் ஒன்று, பீரியட் உள்ளாடைகள் மிகவும் வசதியானவை. இதை பயன்படுத்துவதன் மூலம் பெண்களுடைய உடல்நலனுக்கு மிகவும் பாதுகாப்பானவை. அதேபோன்று சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. கசிவைத் தடுக்க பல அடுக்குகள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த உள்ளாடைகளையும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

மாதவிடாய் ஸ்பாஞ்ச்

இதுகுறித்து பலருக்கும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது மென்மையான ஸ்பாஞ்சுகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. குளியலுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்ச் போல காட்சியளித்தாலும், இது மாதவிடாய் காலத்தில் நல்லமுறையில் பலன் தரும். மாதவிடாய் காலத்தில் இரத்த ஓட்டத்தை சீராக தடுக்கும் திரம் கொண்டது. மாதவிடாயின் போது பயன்படுத்திய பின் தண்ணீர் மற்றும் வினிகரை கொண்டு எளிதாக சுத்தம் செய்து ஆறு மாதங்கள் வரை ஒரு ஸ்பாஞ்சை பயன்படுத்தலாம்.
 

click me!