
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், பாலிவுட் காமெடி நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி உள்ளிட்ட பலரும் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவங்கள் நாட்டையே உலுக்கின. இவர்கள் பிரபலங்கள் என்பதால், அவர்களுடைய மரணம் தொடர்பான செய்திகள் மக்களுக்கு தெரியவந்தன. ஆனால் ஜிம்முக்கு செல்லும் நடுத்தர வயதுடைய பலர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியிலும் அதிகரித்து காணப்படுகிறது என்பது மிகவும் வேதனைக்குரிய செய்தியாகும். . எனவே, ஜிம் உடற்பயிற்சிகளுக்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பைப் பற்றி நாம் அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். குறிப்பாக 40 வயதை கடந்தவர்கள் ஜிம்முக்கு போகும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
உடற்பயிற்சி மற்றும் மாரடைப்பு
குறிப்பிட்ட இந்த சம்பவங்களால் ஜிம்முக்கு செல்வதால் மாரடைப்பு ஏற்படுகிறது என்றாகிவிடாது. நீங்கள் வழக்கமான உடற்பயிற்சிகளை செய்து வந்தால் எந்த பிரச்னையுமில்லை. இன்னும் கொஞ்சம் உடலை ஏற்றவேண்டும் என்று கருதி, வழக்கத்துக்கு மாறான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது தான் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக கொஞ்சம் கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்யப் போகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு மருத்துவரைச் சந்தித்து தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இருதய ஆரோக்கியம் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
நாற்பது வயதை கடந்ததும் கவனிகக் வேண்டியவை
நீங்கள் 40 வயதுக்கு மேல் இருந்தால், ஜிம்மிற்குச் செல்வதற்கு முன் சில சோதனைகளைச் செய்து கொள்வது நல்லது. அதன்மூலம் உங்களுடைய உடல்நலம் குறித்து முழு விவரங்களும் கிடைக்கும். அதேபோன்று உங்களுடைய மனநலனையும் சோதனைக்கு உட்படுத்துவது மிகவும் முக்கியம். உடற்பயிற்சி காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை உங்களால் எவ்வளவு தூரம் தாங்க முடியும் என்பதை புரிந்துகொள்ள, இந்த சோதனை உதவும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் பயிற்சியாளருடனோ அல்லது எந்த பிரபலங்களுடனோ போட்டியிடக் கூடாது. நீங்கள் உங்களுடன் மட்டுமே போட்டியிட வேண்டும். உங்கள் நலனில் அக்கறை கொண்டு தான், நீங்கள் செயல்பட வேண்டும். அதுதான் ஆரோக்கியமான செயல்முறையாகும்.
நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் இதய ஆரோக்கியம், முந்தைய நோய்கள்/உடல்நலப் பிரச்சனைகள், மனநிலை ஆகியவற்றைக் கவனித்துக்கொள்வது கட்டாயமாகும். ஏனெனில் நாற்பதுக்குப் பிறகு திடீரென உடல் ரீதியான பிரச்சனைகள் பல உருவாக வாய்ப்புள்ளன.
குளிர்காலத்தில் சாப்பிட்ட வேண்டிய பழங்களின் பட்டியல் இதோ..!!
ஜிம்மில் கவனிக்க வேண்டியவை
நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும். மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே இதைச் செய்யுங்கள். ஒருவேளை உங்களுடைய பயிற்சியாளருக்கு இதுகுறித்து நல்ல புரிதல் இருந்தால், அவருடைய வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு உடற்பயிற்சி செய்யலாம்.
வொர்க்அவுட்டை சரியான காற்றோட்டம் உள்ள இடத்தில் செய்ய வேண்டும். போதுமான தண்ணீர் குடிக்கவும். வொர்க்அவுட்டிற்குப் பிறகு மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்த வேண்டாம். இதேபோல், இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 140 துடிப்புகளுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
வொர்க்அவுட்டிற்கு முன் அல்லது பின் மார்பு பகுதியில் ஏதேனும் அசவுகரியம், கனம், வேதனை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வொர்க் அவுட் செய்வதை நிறுத்திவிடுங்கள். உங்களுக்கு ஏதேனும் உடல் பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.