
குழந்தைகள் நன்றாக படிப்பது பெற்றோரின் விருப்பமாக இருக்கும். அவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும்; படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை விரும்பாத பெற்றோர் குறைவுதான். குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்கவும், மூளையின் செயல் திறனை மேம்படுத்தவும் உணவு முதல் உடற்பயிற்சி வரை பல விஷயங்களை பெற்றோர் முயன்று வருகின்றனர். இந்தப் பதிவில் குழந்தைகள் படிக்கும் போது குட்டித் தூக்கம் தூங்குவது எவ்வளவு நல்லது? அதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகள் என்னென்ன என்பதை காணலாம்.
அண்மையில் ஹார்வர்ட் செய்த ஆய்வுகளில் குட்டித் தூக்கம் நினைவாற்றலையும், மூளையின் செயல்திறனையும் அதிகரிப்பதை விளக்குகிறது. படிப்பதற்கு மட்டுமல்ல; வேலைக்கு நடுவில் குட்டி தூக்கம் போடுவதும் செயல்திறனை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தூங்கும்போது வேலை, படிப்பு தொடர்பான குறுகிய கால தகவல்கள் நீண்ட காலத்திற்கு நினைவில் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில், தட்டச்சு வரிசையைக் கற்ற 25 பங்கேற்பாளர்களுடைய மூளை செயல்பாடு கண்காணிக்கப்பட்டது. இதில் தூக்கத்தின் போது மூளையின் செயல்திறன், நினைவாற்றல் கண்காணிக்கப்பட்டது. தூக்கத்திலும் மூளையின் வெளிப்புற அடுக்கான கார்டெக்ஸில் இருக்கும் பகுதிகள் செயலில் இருந்துள்ளது. இது ஞாபகசக்தி உள்ளிட்ட செயல்பாடுக்கு உதவக் கூடியதாகும். இதில் வேலை தொடர்பான தகவல்கள் செயலாக்கப்படுவதும் தெரிய வந்தது.
மூளை வெளிப்புற அடுக்கில் மூளை அலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், தூக்கத்திற்குப் பின் ஆய்வில் கலந்துகொண்டவர்களின் செயல்திறன் மேம்படுவதுடன் அவை தொடர்புடையதாக இருந்ததாகவும் ஆய்வு முடிவுகள் குறிப்பிட்டுள்ளன. தூக்கத்தில் பயிற்சி நேரத்தில் செயல்படும் கார்டிகல் மூளைப் பகுதிகள் தாள செயல்பாடு அதிகமாக இருந்துள்ளன. இப்படி அதிகரித்த மூளை தாளங்கள், தூக்கத்திற்குப் பின் வேலை செய்த பங்கேற்பாளர்கள் எவ்வளவு மேம்பட்டிருந்தார்கள் என்பதைக் காட்டியது.
குட்டித் தூக்கம்!
தூக்கத்தில் மூளையில் உள்ள அனைத்து இடங்களிலும் மூளை தாளங்கள் ஏற்படுகின்றன. இந்தத் தாளங்கள் படித்த பின்னர், வேலைக்கு பின்னர் அதிகரிக்கும். இது நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவும் என சொல்லப்படுகிறது. ஆகவே பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் படிப்புக்கு நடுவில் அல்லது படித்ததும் தூங்கி வழிந்தால் அவர்களை சில நிமிடங்கள் தூங்க அனுமதியுங்கள். குட்டித் தூக்கத்திற்கு பின் அவர்களுடைய கற்றலின் திறன் மாறும். பின் படிக்கச் சொல்லுங்கள்.