சமையலறையில் உள்ள அனைத்து பொருட்களும் நமக்கு ஆரோக்கியம் தரும் என்று கூறிவிட முடியாது. சில உணவுகள் நமக்கு அவசியமானவை என்றாலும், அதனால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட வழிவகுக்கும்
மனித இயக்கத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து இயங்குவதற்கு உணவு தேவை. அதனால் சமையலறை ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கு காரணம் அங்கு தான் ஒரு மனிதனின் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது. இன்று மாறிவரும் உலகில், உணவுப் பழக்கம் பெரியளவில் மாற்றம் கண்டு வருகிறது. இதனால் சமையல் அறை பொருட்களின் பயன்பாடும் மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எப்போதுமே மாற்றம் நடக்கத்தான் செய்யும், அது நல்லது தான். எனினும் அப்படி நடக்கும் போது ஒரு கவனிப்பு நமக்கு இருக்க வேண்டும். அந்தவகையில் சமையலறையில் இருக்கும் பொருட்களில் நாம் ஆரோக்கியம் சார்ந்து கவனிக்க வேண்டிய பொருட்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
உப்பு
உணவுக்கு மட்டுமில்லாமல் மனித உடல்நலனுக்கும் உப்பு அவசியமான பொருளாகும். அதை அளவுடன் பயன்படுத்துவது மிகவும் நல்லது. உப்பை நீங்கள் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அது ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கிறது. வெள்ளை உப்புக்கு பதிலாக கல் உப்பு பயன்படுத்துவது ஓரளவுக்கு நன்மை தரும். உப்பு அளவுக்கு மீறி சாப்பிட்டால், ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும், இருதய நலன் கெடும். அதனால் எந்த உணவையும் சமைக்கும் போது, உப்பின் அளவை அளவுடன் உபயோகிப்பது முக்கியமாகும்.
சக்கரை
எல்லோருக்கும் பிடித்த ஒரு சுவை என்றால் அது இனிப்புச்சுவை தான். குழந்தை முதல் பெரியவர்கள் வரை இனிப்பு என்றாலே ஒரு குதூகலம் வந்துவிடும். ஆனால் அதையும் நாம் அளவுடன் தான் சாப்பிட வேண்டும். அதிக சர்க்கரை உட்கொள்வது உடல் எடையை அதிகரித்துவிடும். குறிப்பாக தொப்பை போட்டு, உடலுக்குள் கொழுப்பு வளருவதற்கு காரணமாகிவிடும். ரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகரித்தால் நீரிழிவு நோய் ஏற்படும். இதை ஒட்டுமொத்த உடல் இயக்கத்தையும் முடக்கிவிடும் அபாயம் கொண்டது.
கறிவேப்பிலையின் மகத்துவம் தெரிந்தால், இனி சாப்பிடும் போது அதை ஒதுக்கமாட்டீர்கள்..!!
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
ரீஃபைண்டு ஆயில் என்று விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களில் உடலுக்கு கேடு விளைவிக்கும் கெட்டக் கொழுப்புகள் அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதை உணவாக எடுத்துக்கொள்ளும் போது, உடலில் கெட்டக் கொழுப்பு அதிகரித்து கொல்ஸ்ட்ரால் பாதிப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்குப் பதிலாக கடுகு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தென்னிந்தியாவில் எள்ளு மற்றும் கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்தலாம்.
பச்சை உருளைக்கிழங்குகள்
நீங்கள் சந்தையில் உருளைக்கிழங்கு வாங்கும் போது, அதில் பச்சை நிற கிழங்குகள் காணப்படும். கொஞ்சம் நாள் வைத்திருந்து சமைக்கலாம் என்று பலரும் வாங்கி வருவதுண்டு. ஆனால் அதுபோன்ற உருளைக்கிழங்குகள் உடலுக்கு மிகவும் ஆபத்தானவை. எல்லோருக்கும் அதை சாப்பிடுவது செரிமானமாகும் என்று கூற முடியாது. ஒருசிலருக்கு வாந்தி பேதி ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலைக்குக் கூட செல்லலாம்.
காய்ந்த மிளகாய்
காய்ந்த மிளகாயை அதிகமாக உட்கொள்வது பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதனால் சமையலில் வரமிளகாயின் பயன்பாட்டை குறைத்துக்கொண்டு, பச்சை மிளகாய் சாப்பிடுங்கள். ஆனால் உணவில் நிறம் வரவேண்டும் என்று கூறி, காய்ந்த மிளகாய்யை நிறைய பேர் பயன்படுத்துவண்டு. குழம்பு, சாம்பார், சால்னா போன்ற சமையலுக்கு அதை பயன்படுத்தலாம். ஆனால் பொரியல், கூட்டு, தொகையல் போன்றவற்றுக்கு பச்சை மிளகாய் ருசியாக இருக்கும். வரமிளகாயை விடவும் பச்சை மிளகாயின் தான் நிறைய சத்துக்கள் காணப்படுகின்றன.
மைதா
மைதா ஒரு சுத்திகரிக்கப்பட்ட மாவு தான். பிஸ்கட்டுகள், கேக்குகள், ரொட்டி, பாஸ்தா, மேகி, நான், பரோட்டா போன்ற உணவுகள் மைதா கொண்டு சமைக்கப்படுகிறது. மைதாவை அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படுவது மட்டுமின்றி உடல் எடையும் அதிகரிக்கும். வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் ஏற்படும். இதை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இதய நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்புக் கூட வரலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். முடிந்தவரை மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை இரவு வேளையில் சாப்பிட வேண்டாம்.