சென்னையில் இன்ஃப்ளூயென்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம்டைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழைக்காலம் வந்துவிட்டாலே பருவமழை தொடர்பான நோய்களும் வேகமாக பரவத்தொடங்கும். குறிப்பாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழைக்கால நோய் பரவல் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.
காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வைரஸ் மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் காய்ச்சல் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
எனினும் இது எந்த வகையான காய்ச்சல் என்பதை கண்டறிய, தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மொத்தம் 300 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இன்ஃப்ளூயென்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் இன்ஃப்ளூயென்ஸா ஏ வகை காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்வலி, அதீத காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருக்கிறது.
காய்ச்சலின் தன்மையை பொறுத்து இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொண்டை வலியுடன் காய்ச்சல் இருந்தால் அதற்கு சாதாரண முறையில் சிகிச்சை அளிக்கப்படும். அதே நேரம் குழந்தைகள், முதியவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து வழங்கப்படுகிறது.
மாறாக அதீத காய்ச்சல், சளி, தொண்டை வலி, வாந்தி போன்றவை இருந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய வகை கொரோனாவின் அறிகுறிகள் மாறி வருகிறதாம்.. என்னென்ன தெரியுமா?
காய்ச்சல் வராமல் எப்படி தற்காத்து கொள்வது?
மேலும் காய்ச்சல் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த மழைக்காலத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் ஓரிரு நாட்கள் பார்த்து விட்டு காய்ச்சல் குறையாத நிலையில் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
அடிக்கடி கைகளை கழுவுதல், கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை குடித்தல், சூடான உணவை சாப்பிடுதல், ஹோட்டல் உணவுகளை தவிர்த்து வீட்டிலேயே ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது, கழிவறைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.