கம்பு அரிசியைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் ஆரோக்கியம் பெறலாம்…

Asianet News Tamil  
Published : Jun 09, 2017, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
கம்பு அரிசியைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் ஆரோக்கியம் பெறலாம்…

சுருக்கம்

How to use millet rice to get health ...

 

அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச் சத்து என அனைத்துச் சத்துகளுமே அதிகம் கொண்ட தானியம் கம்பு! அரிசியை விட கிட்டத்தட்ட 8 மடங்கு அதிக இரும்புச் சத்து!

கன்னடத்தில், 'பஜ்ரா’ என்று அழைக்கப்படும் இந்தக் கம்பு, கர்நாடகத்திலும் ஒரு சில வட மாநிலங்களிலும் இன்றும் மிகப் பிரபலம்.

வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும் இதனை, சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடி போட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பின் உலையில் போட்டு வேகவைத்தால்தான் நல்ல குழைவாக வரும். ஆனால், சுவையிலோ, பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில் வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும்.

வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் 45 முறை கண்டிப்பாகத் தர வேண்டிய தானியம்.

பொதுவாக, கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. 'சிறைக்குப் போனால் கம்பங்களிதான் தின்ன வேண்டும்’ என்பது போன்ற பேச்சுகளும் இதற்குக் காரணம். ஆனால் கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக, அவலாக, பொரியாக... எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம்.

அருமையான நாட்டுக் கோழி பிரியாணியோ, ஹைதராபாத் தம் பிரியாணியோகூட கம்பில் செய்து கலக்கலாம். கம்பை இரண்டாக உடைத்து, தண்ணீரில் ஊறவைத்து, அதற்குப் பின் நெல் அரிசியில் எப்படி பிரியாணி செய்கிறீர்களோ அப்படியே செய்ய வேண்டியதுதான். கோழி மீது இரக்கம் உள்ளவர்கள், பீன்ஸ், கேரட், ரொட்டித் துண்டு போட்டு வெஜிடபிள் பிரியாணியும் செய்யலாம்.

கம்பு ரொட்டி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கம்பில் உள்ள லோ கிளைசிமிக் தன்மையாலும், அதில் ஏற்கெனவே உள்ள கூடுதல் நார்ச் சத்தினாலும், காலை/ மதிய உணவில் இதை எடுக்கும்போது பட்டை தீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்சனையைத் தராது. அரிசியைப் போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள் பகுதியில் அத்தனை நல்ல விஷயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கும் எடை குறைக்க விரும்புவர்களுக்கும் மிக ஏற்றது

தவிர, இதில் உள்ள 'அமைலோஸ் அமைலோபெக்டின்’ அமைப்பு நெல் அரிசியைக்காட்டிலும் மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், சீரணத்துக்கும் கொஞ்சம் தாமதமாகிறது. இந்த அமைப்பினால் மெள்ள மெள்ளவே கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசிமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது. சத்துச் செறிவு அடர்த்தியாக உள்ள கனத்த உணவு என்பதால், என்னதான் பிடித்த குழம்பை, பிடித்த கையுள்ளவர் பரிமாறினாலும் கம்பு சாதத்தை ஒரு கட்டு கட்ட முடியாது. அளவாகச் சாப்பிடுவதால், எடை குறைக்க விரும்புவோருக்கும் இது ஓர் அற்புதத் தானியம்!

இன்று பலரும், நான் ''டயபடிக் சார். அரிசியே சாப்பிடுறது இல்லே. வெறும் சப்பாத்திதான் மூணு வேளையும்'' என்பார்கள். அது தேவையே இல்லை. சர்க்கரை நோய்க்கான சரியான சிகிச்சையை உங்கள் குடும்ப மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, இரு நாள் புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சாப்பாத்திக்கு அடிமை வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் இல்லை.

இப்படிப் பல தானியங்களையும் கலந்து எடுத்துக்கொள்வதுடன் கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழுங்கள். உங்கள் சர்க்கரை நோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும்.

PREV
click me!

Recommended Stories

டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?