
ஆங்கிலத்தில் "ஷிங்கிள்ஸ்" எனப்படுவது அக்கி நோய். இது மிகவும் வலியைத் தருகின்ற தோலில் கொப்பளத்தை உண்டாக்குகின்ற நோயாகும்.
இது வைரஸால் உண்டாகிறது. அம்மை என்று சொல்லக்கூடிய சிக்கன்பாக்ஸை உருவாக்கும் வைரஸ் கிருமியும் இதுதான்.
சிக்கன்பாக்ஸ் என்ற சின்னம்மை உருவானபிறகு இந்த வைரஸானது செயல்பாடற்ற நிலையில் நரம்பு மண்டலத்தில் தங்கியிருக்கும். மீண்டும் சில சந்தர்ப்பங்களில் தூண்டி விடப்பட்டு இது அக்கி நோயாக மாறும்.
50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்தவர்களுக்கும் இது வரும். முதலில் வலி, துடிப்பு, எரிச்சல் இவை ஒரு பக்கத்தில் காணப்படும். பின்பு வலியும் எரிச்சலும் மிக அதிகமாகும்.
பின்பு சிவந்த நிறத்தில் தோலில் கொப்பளங்கள் உருவாகும். அதன்பின் இந்த கொப்பளங்கள் உடைந்து புண்ணாக மாறும். இது உலரத் தொடங்கும். மூன்று வாரங்களில் இந்த உலர்ந்த பகுதி கீழே விழும். பொதுவாக வயிற்றின் மேற்பகுதியிலோ அல்லது மார்பின் அருகேயோ இது வரலாம்.
முகத்திலும், கண்ணிலும், வாயிலும் வந்து நாம் பார்த்ததுண்டு. இதனுடன் ஜூரம், குளிர் காய்ச்சல், உடல் அலுப்பு, தலைவலி, மூட்டுவலி, கழலைகள், கைகால் வலி, தசை பலவீனம் போன்றவை வரலாம். தசைகளை அசைப்பதில் பிரச்சனைகள் வரலாம்.
முக நரம்பு பாதிக்கப்பட்டிருந்தால் கண்களை மூடித்திறப்பதிலும், செவித்திறனிலும், சுவைகளை உணர்வதிலும், பார்வையிலும் பிரச்சனைகள் உருவாகலாம். இந்த நோயை பார்த்த உடனேயே கண்டுபிடிக்க முடியும். ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகமாகக் காணப்படும்.
நவீன மருத்துவத்தில் வைரசுக்கு எதிரான மருந்துகள் வந்துள்ளன. இதனை 72 மணி நேரத்திற்கு முன்பு தொடங்க வேண்டும். கொப்புளங்கள் உருவாவதற்கு முன்பு தொடங்கினால் சிறந்தது. அரிப்பைக் குறைக்கும் மருந்துகள், வலி நிவாரணிகள், மேல்பகுதியில் பூசுவதற்கு சில களிம்புகள் இவற்றை நவீன மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள்.
குளிர்ந்த நீரில் பஞ்சை முக்கி மெதுவாக அமுக்கிவிடச் சொல்வார்கள். காய்ச்சல் முடிகின்றவரை ஓய்வெடுக்கவும் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவும் சொல்வார்கள்.
இந்த புண்ணானது கசிவுடன் காணப்படும். சில வேளைகளில் சிக்கன்பாக்ஸ் வராதவர்களுக்கு இது வரலாம். பொதுவாக கர்ப்பிணி பெண்கள் இவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பது நல்லது. மூன்று வாரங்கள் இந்தக் கடுமைகள் காணப்படும். பொதுவாக இது ஒருமுறை ஒருவருக்கு வந்தால் மறுமுறை வருவதில்லை. இதனால் நரம்பு பாதிப்பு சிலருக்கு வருவதுண்டு.
அக்கி வந்த இடத்தில் நரம்பு வலி மிகவும் தொந்தரவு அளிக்கும். மூளை பாதிப்பு, காது கேளாமை, கண் பாதிப்பு போன்றவை அபூர்வமாக ஏற்படலாம். கண்ணைப் பாதிக்கலாம்.
ஆதலால் ஒழுங்காக சிகிச்சை செய்ய வேண்டும். நோயாளிகளின் கொப்புளங்களை நேரடியாக நாம் தொடக் கூடாது. இதற்கு இப்பொழுது தடுப்பூசிகள் வந்துள்ளன. இது சிற்றம்மை தடுப்பூசியிலிருந்து மாறுபட்டதாகும்.
இவை தவிர பிறப்புறுப்புக்களில், தவறான இல்வாழ்க்கையால் ஜெனிட்டல் ஹெர்பஸ் போன்றவை வரலாம். இது பிறப்புறுப்பில் காணுகின்ற தோலில் வரும். பாதுகாப்பற்ற இல்வாழ்க்கையின் போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இது பரவும். வாய், உதடு போன்றவற்றில் புண்களை ஏற்படுத்தி காய்ச்சலுடன் வரும்.
தீர்வு: மண் பூசினால் வலி நீங்கும்:
அக்கி நோய் பாதித்தவர்களை கிராமங்களில் மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் அழைத்து செல்வார்கள். அவர்கள் காவி மண்ணினால் அக்கி நோய் கண்டவரின் உடலில் தேய்த்து அனுப்பி விடுவார்கள். வலியும்,வேதனையும் நீங்கி குணமாகும்.
பூங்காவியை பன்னீருடன் சேர்த்து குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூச எரிச்சல்,வலி, வேதனை குறையும். ஊமத்தை இலை பறித்து வந்து அரைத்து அதனுடன் வெண்ணை சேர்த்து கலந்து அக்கியின் மேல் பூசவும்.கொப்புளங்கள் அடங்கும்.எரிச்சல்,வலி குறையும்.
உணவில் காரம், உப்பு, குறைக்கவும். குளிர்ச்சியான உணவுகள் உண்ணவும். வெயிலில் அலையக்கூடாது, குங்கிலிய பற்பம் 10-கிராம் வாங்கி அதில் ஒரு மொச்சை அளவு எடுத்து வெண்ணையில் [எலுமிச்சை அளவு] கலந்து காலை மாலை உண்ணவும்.7-நாள் தொடர்ந்து மருந்தை உண்ணவும்.
ஆலம் விழுதை சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவி வர குணமாகும். செம்மர பட்டையை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து உடலில் அக்கி உள்ள இடத்தில் பூசி வந்தால் அக்கி குறையும்.