வாந்தியை கட்டுப்படுத்த எளிதான வீட்டு வைத்தியம்? வாந்தி நின்றவுடன் படுக்கலாமா?

By Dhanalakshmi G  |  First Published Jul 19, 2023, 11:36 AM IST

பொதுவாக சிலருக்கு சாப்பிட்டது சேரவில்லை என்றால் வாந்தி வரும். அஜீரணம் இருந்தாலும் வயிற்றை பிரட்டிக் கொண்டு வரும். பெரியவர்களுக்கு என்றால் எளிதில் கண்டறிந்து விடலாம். சிறியவர்களுக்கு என்றால் கண்டறிவது கடினம். அவர்கள் வாந்தி எடுப்பதில் இருந்து அவர்களுக்கு சாப்பிட்டது சேரவில்லை, ஜீரணிக்கவில்லை என்று முடிவு செய்கிறோம்.


வாந்தி எடுக்கும்போது வீட்டில் இருக்கும் கைவைத்தியத்தைக் கொண்டு எளிதில் வாந்தியை நிறுத்தலாம். வாந்தி எடுக்கும்போது உடலில் இருக்கும் நீர் குறையும். உடல் நீர்த் தன்மையை இழக்கும். இதை எப்படி சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.

வாந்திக்கான காரணம்?
சரியாக மலம் கழிக்காமல் இருத்தல், அதிகமாக சாப்பிடுதல், உணவில் நச்சுத்தன்மை கலந்து இருத்தல் போன்ற பொதுவான காரணங்களால் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்படுகிறது. ஆனால், பெரியவர்களுக்கு உடல் நலம் இல்லை என்றால் வாந்தி ஏற்படும். அதிகமாக களைத்துப் போகுதல், அதிகமான காய்ச்சல், தலைசுற்றல் போன்ற காரணங்களால் வாந்தி ஏற்படும். அப்போது கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். 

Latest Videos

மலம் கழித்தலில் சிக்கல், நச்சு உணவு, மருந்து அலர்ஜி, அதிகமாக மதுபானம் அருந்துதல், அதிகமாக சாப்பிடுவது, வயிற்றுப் புண், கர்ப்பத்தின் ஆரம்ப கட்டம், புற்றுநோய், கட்டிகள் இருத்தல், இருதய நோய், சில வாசனை பிடிக்காமல் போகுதல், மூளையில் காயம் ஏற்பட்டு இருந்தால், கடலைப் பார்த்தல் சிலருக்கு சேராது போன்ற காரணங்களால் வாந்தி ஏற்படும்.

சீரகம்:
சீரகத்தை சிறிய தணலில் வறுக்க வேண்டும். நிறம் மாறும்போது எடுத்து விடவும். மிக்சியில் போட்டு ஒன்று இரண்டாக அரைத்து பாட்டிலில் போட்டு வைக்க வேண்டும். வாந்தி எடுக்கும்போது அல்லது அஜீரணம் இருக்கும்போது அரை ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு மென்று முழுங்க வேண்டும். 

இஞ்சி டீ:
இஞ்சி மற்றும் கொத்தமல்லி விதை இரண்டையும் ஒன்று இரண்டாக அரைக்க வேண்டும். ஒரு கப் தண்ணீர், வெள்ளம் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் கொத்தமல்லி இஞ்சியைப் போட்டு, வெள்ளம் கலந்து வடிகட்டி குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு இஞ்சியின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

சீரகத் தண்ணீர்:
அஜீரணத்தை சரி செய்வதுடன் வாந்தியையும் நிறுத்தும். சீரகத்தை நன்றாக ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வாந்தி கட்டுப்படும்.

புதினா இலை:
வாந்தி மற்றும் அஜீரணத்தை கட்டுப்படுத்த மிகவும் உதவிகரமாக புதினா இருக்கும். சிலருக்கு புதினா இலையை நுகர்ந்து பார்த்தாலே வாந்தி நின்று விடும். சிலருக்கு பிரஷ்ஷாக இலையை எடுத்து சுத்தம் செய்து மென்று தின்றால் வாந்தி நின்றுவிடும். டீயில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.  தண்ணீரில் கைப்பிடி அளவு புதினா இலையை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் வாந்தி நின்றுவிடும். 

பழ ரசம்:
சிலருக்கு எலுமிச்சை, ஆரஞ்ச், வெள்ளரி ஆகியவற்றை தண்ணீரில் போட்டு வைத்து குடித்தால் வாந்தி கட்டுப்படும்.

காய்ந்த நெல்லிக்காய்:
பெரிய நெல்லிக்காய் வாங்கி சிறிது சிறிதாக கட் செய்து உப்பில் ஊற வைத்து, வெயிலில் உலர்த்தி காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு பயணத்தின்போது வாந்தி ஏற்படும். அந்த நேரங்களில் ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டுக் கொண்டால் வாந்தி ஏற்படாது. காய்ந்தது இல்லை என்றாலும் கவலையில்லை. பிரஷ்ஷாக கடையில் பெரிய நெல்லியை வாங்கிச் சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் பெரிய நெல்லியை தேனில் ஊறவைத்தும் சாப்பிடலாம்.

புளி:
இது பலரையும் ஆச்சரியப்படுத்தும். புலி வாந்தியைகட்டுப்படுத்துமா என்று. ஆம் கட்டுப்படுத்தும். சிறிய துண்டு புளியை வாயில் போட்டுக் கொண்டால், வாந்தி கட்டுப்படும். அதேபோல் இன்று கடைகளில் சிறிய Tamarind Candy கிடைக்கிறது அதையும் வாங்கி சாப்பிடலாம். 

லெமன் டீ:
ஒரு கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு டீத்துள் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை பிழிந்து, தேன் கலந்து குடித்தல் வாந்தி கட்டுப்படும். 

மேலே குறிப்பிட்ட வீட்டு வைத்தியங்களை ஒரு நாள் வரை நீடிக்கும் வாந்திக்கு பயன்படுத்தலாம். ஆனால், தொடர்ந்து ஒரு நாளைக்கு மேலும் நிற்காமல் வாந்தி இருந்தால், மருத்துவரை அணுகவும். தொடர்ந்து அடிக்கடி வாந்தி இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். நெஞ்சு வலி, அதிக காய்ச்சல், கண் பார்வை மங்குதல், கடுமையான வயிற்று வலி, தலைவலி ஆகியவற்றுடன் வாந்தியும் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் அனைத்து டிப்ஸ்களும் சாதாரண வாந்தி மற்றும் அஜீரணத்துக்கு மட்டுமே.

வாந்தி நின்ற பின்னர் என்ன சாப்பிடலாம்:
உடலில் நீர்த்தன்மை குறைந்து விடாமல் இருக்க அவ்வப்போது சிறிது தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். பசித்தால் மட்டும் சாப்பிடவும். அரிசி கஞ்சி எடுத்துக் கொள்ளலாம். இது எளிதில் ஜீரணிக்க உதவும். 

தூங்கலாமா?
வீட்டு வைத்தியம் எடுத்துக் கொண்ட பின்னர் சிலருக்கு உடனடியாக வாந்தி நின்றுவிடும். உடனடியாக படுக்கைக்கு செல்லக் கூடாது. ஓமம் தண்ணீர் எடுத்துக் கொண்டு, வயிறு செட்டில் ஆன பின்னர் படுக்கலாம். தலை பாகம் மேலே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

click me!