
நம்முடைய வயிற்று ஆரோக்கியம் என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; இது மனநிலை சார்ந்ததும். நீங்கள் அதிகமான மன அழுத்தத்தில் இருந்தால் வயிற்று ஆரோக்கியம் பாதிக்கப்படும். குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளை இங்கு காணலாம்.
குடலை ஆரோக்கியமாக வைப்பதில் நாம் உண்ணும் உணவுகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. தினமும் வாக்கிங் செல்வது உடலுக்கு நல்லது; செரிமானத்திற்கு உதவும் என்றாலும் உணவிலும் சில மாற்றம் கொண்டு வருவது நல்லது. அதற்கு தேங்காய் நீர், புதினா, இஞ்சி, சியா விதைகள் போன்றவை போதும். இதைக் கொண்டு சுவையான, ஆரோக்கியமான பானம் தயாரிக்கலாம்.
எப்படி செய்ய வேண்டும்?
ஒரு டீஸ்பூன் சியா விதைகளை (இரவில் அல்லது 30 நிமிடங்கள் மட்டும்) முன்கூட்டியே ஊற வையுங்கள். 2 டீஸ்பூன் இஞ்சி, புதினா சாற்றை ஒரு கப் தேங்காய் நீருடன் நன்கு கலந்து அதனுடன் ஊறவைத்த சியா விதைகளைப் போட்டு வைத்துவிடுங்கள். சில நிமிடங்களுக்கு பின் இதை அருந்தலாம். இதை அருந்துவகால் செரிமானக் கோளாறுகளே வராது. இதில் போடப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளும் தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளன. அவை குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.
இளநீர்
பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய தாதுக்கள் அடங்கிய தேங்காய் நீர் எலக்ட்ரோலைட் போல செயல்படும். இது குடலில் இருக்கும் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகளை வெளியேற்றுகிறது. உடல் சூட்டை குறைத்து நீரோட்டமாக வைத்திருக்க உதவுவதற்கு சிறுநீர்ப் பாதை தொற்று இருப்பவர்கள் இளநீர் குடிப்பது நல்லது.
புதினா சாறு
புதினாவில் இருக்கும் மென்தோல் வயிற்றுப் பிடிப்புகள், வாயு, வீக்கம் ஆகியவற்றை சரி செய்ய உதவுகிறது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மழை நேரங்களில் ஏற்படும் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது.
இஞ்சி சாறு
செரிமானத்தை மேம்படுத்தவும் குமட்டலை குணப்படுத்தவும் இஞ்சி சிறந்த தீர்வாக இருக்கும். அஜீரண கோளாறுகளை சரி செய்து செரிமானத்தை தூண்டுகிறது. குடல் வீக்கத்தை குறைக்க இஞ்சிச் சாறு நல்ல பலனை தரும். கடினமான உணவுகளை செரிப்பதற்கும் செரிமானத்தை இலகுவாக்குவதற்கும் இஞ்சி சாறு சிறந்த பலன்களை தருகிறது.