நரை முடியைப் போக்கும், பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை ஹேர் டை…

 
Published : Feb 06, 2017, 01:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
நரை முடியைப் போக்கும், பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை ஹேர் டை…

சுருக்கம்

ஒருவரை இளமையாகக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பது சருமமும் தலை முடியும்தான்.

நரை வந்து வெளுத்துப் போகும்போது கருமை நிறம் வேண்டும் எனப் பலரும் நாடுவது `டை’ எனப்படும் தலைமுடிச் சாயத்தைதான்.

இயற்கை தலைமுடிச் சாயம் இதோ…

"இன்றைக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் தலைமுடிச் சாயங்களில் பெரும்பாலானவை பல்வேறு வேதிப்பொருட்கள் நிறைந்தவை. இவற்றைப் பயன்படுத்துவதால், பக்க விளைவுகளையும் இலவசமாகப் பெற்றுக் கொள்கிறோம்.

ஆரோக்கியமான உணவுகளை உண்டும், இயற்கை முறையில் தயாரிக்கப்படும் டைகளைப் பயன்படுத்தியும் எப்போதும் கருமை நிறக் கேசத்தைப் பெறலாம்; இளமைப் பொலிவான தோற்றமும் பெறலாம்.

கேசத்தின் வலிமை, அதன் உள் அடுக்குச் செல்களைப் பொறுத்துதான் அமைகிறது. மெல்லிய உள் அடுக்குச் செல்களைக் கொண்டவர்களுக்கு நீண்ட நேரான கூந்தலும், அடர்ந்த உள் அடுக்கு செல்களைக் கொண்டவர்களுக்கு கூந்தல் சுருண்டும் இருக்கும்.

இந்த இரு தரப்பினருக்குமே 40 வயதைத் தாண்டியதும் ஏற்படும் முக்கியமானப் பிரச்னை நரை முடி.

‘மெலனின்’ (Melanin) எனும் நிறமிதான் நம் தோலின் நிறத்தை நிர்ணயம் செய்கிறது.

இதைப் போன்றே யூமெலனின் (Eumelanin), பயோ மெலனின் (Bio-melanin) ஆகிய நிறமிகள் நம்முடைய முடியின் கருமை நிறத்துக்குக் காரணமாகின்றன.

இந்த நிறமிகளின் உற்பத்திக் குறைவதால், கருமையான முடிகள் நரைமுடிகளாக மாறுகின்றன.

முதுமையின் காரணமாகப் பொதுவாக, 40 முதல் 50 வயதுகளில் நரை முடி தோன்றும். ஆனால், இன்றையச் சூழலில் இளம் வயதிலேயே பலருக்கும் நரை முடிகள் எட்டிப் பார்க்கின்றன.

மரபியல் காரணங்கள், புகைபிடித்தல், மது அருந்துதல், துரித உணவு உண்பது, புரதச்சத்துக் குறைபாடு மற்றும் `பயோட்டின்’ (Biotin) எனும் ஊட்டச்சத்து குறைதல், வேதிப்பொருட்களை அதிகமாகக்கொண்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்துதல் போன்றவை இளம் வயதிலேயே நரை முடியை ஏற்படுத்திவிடுகின்றன.

நரை முடியைத் தடுப்பதற்கான உணவுகள்…

* பாலில் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம், பயோட்டின் (Biotin), வைட்டமின் டி நிறைந்திருக்கின்றன. எனவே, தினமும் இருவேளை பாலை தவறாமல் குடிக்கலாம்.

* ஒரு நாளைக்கு இரு முட்டைகளைச் சாப்பிடுவதன் மூலம் பயோட்டின் (Biotin) மற்றும் இரும்புச்சத்து போன்ற கேச வளர்ச்சியைத் தூண்டும் சத்துக்களை எளிதில் பெறலாம்.

* வஞ்சரம் மீனில் உள்ள ஒமேகா-3 (Omega-3 Fatty Acid) முடியின் கருமை நிறத்தைப் பராமரிக்க உதவும்.

* உயிர்ச் சத்துக்கள் நிரம்பிய பசலைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை போன்ற கீரை வகைகளும் கேச பராமரிப்புக்குச் சிறந்தவை.

சில இயற்கை டைகளின் செய்முறைகள்…

இயற்கை டை 1:

தேவையானவை:

தேயிலைப் பொடி, கொட்டைப் பாக்குப் பொடி, கறுப்பு வால்நட் பொடி – தலா 3 டீஸ்பூன்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தேவையான மூன்று பொருட்களையும் கொட்டி, வெந்நீர் சேர்த்துப் பசைபோலத் தயாரிக்கவும். இதைக் கேசத்தில் தடவி, 30 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும். பிறகு கேசத்தை நன்றாக உலர்த்தி, இரவில் சிறிது ஆமணக்கு எண்ணெயைப் பூசிவரவும். விரைவிலேயே நரை முடியிலிருந்து விடுபட்டு கருமையான முடிகளைப் பெறலாம்.

இந்தச் செய்முறையில் வெந்நீருக்குப் பதிலாக, பொடிகளை நன்றாகக் காய்ச்சி வடிகட்டி, தேநீர்போலவும் தயாரித்து கேசத்தில் பூசலாம்.

இயற்கை டை 2:

தேவையானவை:

ஆற்றுத்தும்மட்டி பழச் சதை – 1 கப்; நெல்லிப் பழச் சதை – 1 கப்; கரிசாலை இலை – 1 கப்;  தேங்காய் எண்ணெய் – 500 மி.லி.

செய்முறை:

பழச் சதைகளையும், கரிசாலை இலை விழுதையும் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாகக் காய்ச்சவும். இந்த விழுது கரகரப்பாக மாறும் பதத்தில் இறக்கி, வடிகட்டி, ஆறவைக்கவும். தினமும் இந்த எண்ணெயை கேச பராமரிப்புக்குப் பயன்படுத்தினால், நாளடைவில் இள நரை குறைந்து, கூந்தல் கருமையாக வளரும்.

கேசத்தை அலச சீயக்காய் பொடி அல்லது `உசில்’ என்னும் அரக்குப் பொடியைப் பயன்படுத்த வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Ladies Finger in Winter : குளிர்காலத்துல வெண்டைக்காய் 'கண்டிப்பா' சாப்பிடனும் தெரியுமா? நிபுணர்கள் சொல்ற அறிவியல் உண்மை
Green Peas Benefits : பச்சை பட்டாணியை அடிக்கடி சாப்பிடுங்க... பல பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வா அமையும்