தமிழர்களின் பாரம்பரிய பானங்கள்; அவற்றின் மகத்துவங்கள்…,

 
Published : Feb 06, 2017, 01:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
தமிழர்களின் பாரம்பரிய பானங்கள்; அவற்றின் மகத்துவங்கள்…,

சுருக்கம்

தாகத்தைத் தணிக்கவும் உடலைக் குளுமைப்படுத்தவும் நம்மூரில் பாரம்பர்ய ஆரோக்கிய பானங்கள் பல இருக்கின்றன. அவற்றை அன்றாடம் பருகினால் ஏற்படும் நன்மைகள் பல.

பானகரம்

பானகரம் அம்மன் கோயில் திருவிழாக்களில் பிரபலம். கொடம்புளி போட்டு கொதிக்கவைத்த நீரில் நாட்டு வெல்லம், எலுமிச்சைச் சாறு ஆகியவை கலக்கப்படும்.

சமீபகாலமாக, பானகரத்தில் தரமற்ற ஐஸ் கட்டிகள் கலக்கப்படுகின்றன. இதைத் தவிர்க்க வேண்டும்.

இது கோடை காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணம், சிறுநீரக கல் பிரச்னை ஆகியவற்றைத் தடுக்க உதவும்.

பதநீர்

ஆரோக்கிய பானங்கள் தமிழர்கள் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கிறது. நம்மூர் கிராமபுறங்களில் கோடை காலங்களில் உடல் உஷ்ணம் தணிக்க அதிகமாகக் குடிக்கப்படும் இயற்கை பானம் பதநீர்.

பனைமரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளன.  சமீபகாலங்களில் போலி பதநீர் தயாரிப்புப் பெருகிவிட்டது. சுக்ரோஸ் பௌடர், தண்ணீரில் கலக்கப்படுகிறது. இதுபோன்ற பதநீர்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

உண்மையான பதநீர் குடிக்கும்போது, துவர்ப்புச் சுவை இருக்கும். குடித்து முடித்ததும், இனிக்கும். சுக்ரோஸ் கலந்த பதநீர் குடிக்கும்போதே இனிப்பு தெரியும்.

தமிழ்நாடு பனைபொருள் கார்ப்பரேஷனில் தரமான பதநீர் விற்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள், பிரசவ காலத்தில் ஏற்படும், உடல் உஷ்ணத்தைத் தவிர்க்க பதநீர் அருந்தலாம்.

கர்ப்பக் காலத்தில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாகத் தேவைப்படும். மாத்திரைகளைவிட இயற்கையான பதநீர், தாய்க்கும் சேய்க்கும் சிறந்தது.

50 வயதுக்கு மேற்பட்டவர்கள், வயோதிகத்தினால் ஏற்படும் எலும்பு தேய்மானத்தைத் தடுக்க பதநீர் அருந்தலாம்.

நன்னாரி மணப்பாகு டானிக்

100 கிராம் நன்னாரியுடன் 400 மி.லி நீர் சேர்த்து கொதிக்கவைத்து 100 மி.லி-யாக வற்ற வைக்கவும். இந்த நன்னாரி கஷாயத்துடன் வெல்லம் சேர்த்து பாகு பதத்துக்குக் காய்ச்சி பத்திரபடுத்தவும்.

இதனை காலை, மாலை இருவேளையும் குடித்துவர, பித்தம் நீங்கும். உடல் உஷ்ணம் குறைந்து, உடல் புத்துணர்ச்சி பெறும்.
பாகு, தமிழர்கள் பயன்படுத்தி வந்த இயற்கை பிரிசர்வேடிவ். பாகு சேர்ப்பதால், உணவுப் பொருட்களை ஆறு மாதங்கள் வரை கெடாமல் வைத்திருக்க முடியும்.

நீர்மோர்

தமிழர் திருவிழாக்களில் பானகரத்தோடு, நீர்மோர் வழங்கப்படும். தாகம், உடல் உஷ்ணத்தைத் தவிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பானம் இது.

தயிருடன் நீர் சேர்த்து நன்றாக ஆற்றி, வெண்ணெயை வடிகட்டவும். நீர்மோரில் பச்சைமிளகாய் சேர்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக அரைத்த இஞ்சி, மிளகுத் தூள், கடுகு, புதினா சேர்க்கவும். இதனால் செரிமானம் எளிதாகும்.

பஞ்சகோலம்

கொடிவேலி வேர் (Plumbago), சுக்குப் பொடி, திப்பிலிப் பொடி, திப்பிலி வேர்ப் பொடி, மிளகு வேர்ப் பொடி ஆகியவற்றைத் தலா ஐந்து கிராம் எடுத்துக் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை, 5-6 சிட்டிகை எடுத்து, ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்கலாம்.

இதை காலை, மாலை பருகி வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் தன்மை உடையது பஞ்சகோலம். மழைக்காலத்தில் ஏற்படும் சளி தொடர்பான நோய்க்கும் இது சிறந்த மருந்தாகும்.

காயகல்பம்

காலை இஞ்சிச் சாறு, மதியம் சுக்குப் பொடி கலந்த நீர், இரவு கடுக்காய்ப் பொடி கலந்த நீர் குடித்துவந்தால் தீராத நோயெல்லாம் தீரும் என சித்த மருத்துவம் கூறுகிறது. இந்த முறைக்கு `காயகல்பம்’ என்று பெயர். இது சுக்குமல்லி காபி போன்ற ஓர் ஆரோக்கிய பானம். இதனைப் பண்டையத் தமிழர்கள் பருகி வந்துள்ளனர்.

காலநிலைக்குத் தகுந்தாற்போல், உடல் உஷ்ணத்தை அதிகரித்துக்கொள்வதே காயகல்பத்தின் அடிப்படைப் பண்பு. இதில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் அதிகம் உள்ளதால், இவ்வாறு தொடர்ந்து குடித்துவந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

PREV
click me!

Recommended Stories

Papaya Face Pack : பனியால் முகம் வறட்சி ஆகுதா? நீரேற்றமாக வைக்கும் 'பப்பாளி' ஃபேஸ் பேக்!
Aloe Vera For Dandruff : பொடுகை நிரந்தரமாக நீக்க 'கற்றாழை' ஜெல்லை இந்த 1 பொருளுடன் கலந்து யூஸ் பண்ணுங்க