
இன்றைய காலகட்டத்தில் உணவகங்கள் அதிக அளவில் பெருகி விட்டது. எங்கு சென்றாலும் துரித உணவுகள் கிடைக்கிறது. அதற்கு ஏற்றாற் போல், இளம் தலைமுறையினரும் துரித உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நமது உடல் ஆரோக்கியம் தான் கெடுகிறது என்பதை யாரும் சிந்திப்பதில்லை. துரித உணவுகள் மூலம் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகம் சேர்கிறது. இருப்பினும் நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், எந்தவித அறிகுறிகளையும் வெளியில் காட்டாது. இதன் காரணமாகவே இதனை ஒரு சைலன்ட் கில்லர் என பலரும் கூறுகிறார்கள்.
கெட்ட கொலஸ்ட்ரால்
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில், 18 மில்லியனுக்கும் அதிகமானோர் இதய நோய்களால் பாதிக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. சுவாச நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்படுவதை விடவும் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களே அதிகம் என கூறப்பட்டுள்ளது.
கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற தன்மையுடன் இருக்கும். இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஒன்று தான். இருப்பினும் அளவுக்கு மீறினால் பிரச்சனைகள் தான் நமக்கு மிச்சம். ஆனால், நம் உடலில் கொலஸ்டராலின் அளவு சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். அதிகளவிலான கொலஸ்ட்ரால் இருப்பது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்த அதிகளவு வாய்ப்புகள் உள்ளது என்பதால் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீரிழிவு, புகைபிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவையும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பிற்கு காரணமாகும். எல்லா கொலஸ்ட்ராலும் நம் உடலுக்கு தீங்கை விளைவிக்காது. ஹெச்டிஎல் எனும் நல்ல கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு நன்மையை அளிக்க உதவுகிறது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது எந்தவித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது.
குட்டிஸ்க்கு பிடித்த தித்திப்பான இனிப்பு பூரி செய்து அசத்தலாம் வாங்க!
கெட்ட கொலஸ்ட்ரால் ஏற்படுத்தும் பாதிப்புகள்
இரத்தத்தில் உள்ள மற்ற பொருட்களுடன் கொலஸ்ட்ரால் இணைந்து, இதயத் தமனிகளின் உட்புறத்தில் 'பிளேக்' எனும் நிலையை உருவாக்குகிறது. இது இதயத்தின் தசைகளுக்குத் தேவையான ஆக்சிஜனை தடுத்து, மாரடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. மேலும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் இது போன்ற பிளேக்குகள் உண்டாவது மூளைக்கு செல்லும் ஆக்சிஜனை தடுக்கும். இதன் காரணமாக உடனடியாக பக்கவாதம் ஏற்படும் எனவும் சொல்லப்படுகிறது.
கெட்ட கொலஸ்ட்ராலின் அறிகுறிகள்
மார்பு வலி, அதிக வியர்வை, எடை அதிகரிப்பு, பிடிப்புகள் அல்லது வலிப்பு மற்றும் தோல் மஞ்சள் நிறமாக இருப்பது போன்றவை உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகளாகும். ஆகவே, இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.