
How to Stop Fight Between Husband and Wife : கணவன் மனைவி இடையே சண்டை வருவது இயல்புதான் என்றாலும், தொடர்ந்து சண்டைகள் ஏற்படுவது நல்ல விஷயம் அல்ல. எப்போதுமே சண்டை போட்டுக் கொண்டிருந்தால் இருவரும் தனியாக செலவிடும் நேரத்தை தவிர்க்கத் தொடங்கி விடுவீர்கள். ஒருவருக்கொருவர் பேசுவதைக் கூட விரும்பாமல் தவிர்ப்பீர்கள். நீங்கள் இருவரும் பிரச்சினையை குறித்து பேசுவதை குறைத்து விட்டு அதற்கான தீர்வுகளை குறித்து உரையாட வேண்டும். உதாரணமாக ஒருவர் அதிகமாக கோபப்பட்டு பேசிக் கொண்டிருக்கும்போது அதை கேட்டுவிட்டு அந்த பிரச்சினைக்கு காரணத்தை ஆராய்ந்து அதனை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். சிறிது நேரத்திற்கு பின்னர் கோபப்பட்டவர் அமைதியான பின் இருவரும் அமர்ந்து பேசி தவறுகளை புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பதிவில் கணவன் மனைவி உறவு கிடையே சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து காணலாம்.
கணவன் மனைவி உரையாடல்
கணவன் மனைவி ஆகியோருக்கிடையே அரிசி, பருப்பு வாங்குவது முதல் கடனைக் குறைப்பது வரை இருக்கும் பிரச்சனைகளை விடுத்து தனிப்பட்ட முறையிலும் உரையாடல் இருக்க வேண்டும். ஒருவரின் உணர்வுகளை மற்றொருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இது ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசும் போது தான் சாத்தியம். நீங்கள் ஒருவரோடு எவ்வளவு உரையாடுகிறார்களோ அவ்வளவு அதிகமாக இருவருக்கும் இடையிலும் பிணைப்பு ஏற்படும். இதற்காக கணவனும் மனைவியும் திட்டமிட்டு நேரத்தை செலவிட வேண்டும். கணவன், மனைவி தினம்தோறும் குறைந்த பட்சம் 30 நிமிடங்களாகவே இருவரும் அமர்ந்து பேசும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
வெளியே செல்லுதல்
வீட்டிற்குள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு மனக்கசப்போடு இருந்தால் அவ்வப்போது வெளியில் செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மனதை அமைதிப்படுத்தும் இடங்களுக்கு சென்று மனதை இலகுவாக்க முயற்சி செய்யுங்கள். வீட்டைத் தவிர வேறு ஏதேனும் இடத்தில் அமர்ந்து மனம் விட்டு பேசும்போது சில பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.
உங்கள் துணை உங்களிடம் பேசும் போது நீங்கள் வேறு ஏதாவது வேலைகள் செய்து கொண்டிருந்தால் அதை ஒதுக்கி வையுங்கள். இப்போதெல்லாம் பல நேரங்களில் உதாசினம் தான் பிரச்சினைகளுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது மொபைல் போன் பார்ப்பது, டிவி பார்ப்பது துணைக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஒருவர் நம்மிடம் பேசும் போது நாம் அவரை கவனிப்பது தான் மரியாதையாக இருக்கும். இது கணவன் மனைவி மட்டுமல்லாது வெளி இடங்களிலும் பொருந்தும். ஆனால் கணவன் மனைவி என்று வரும்போது நாம் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்கிறோம் என்று தான் கூற வேண்டும். எனவே உங்கள் துணை உங்களிடம் பேசும்போது அவரது கேள்விகளுக்கு சரியான பதிலளியுங்கள். அவரிடம் நேருக்கு நேர் அமர்ந்து அவரது உரையாடலை கவனியுங்கள்.
உதவுதல்
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர். இதனால் மனைவிக்கு வேலைப்பளு அதிகமாகும் வாய்ப்பு இருக்கிறது. வீட்டு வேலைகளையும் செய்து விட்டு வெளியே வேலைக்கு செல்லும் பெண்கள் மனதளவில் சோர்வாக காணப்படுகிறார்கள். இந்த நேரத்தில் கணவர் அவர்களை புரிந்து கொள்ளாமல் பேசும்போது பிரச்சனை வெடிக்கிறது. வீட்டு வேலைகளில் கணவனும் அவ்வப்போது மனைவி உதவி செய்யும் போது தன்னை கணவன் அக்கறையாக கவனித்துக் கொள்கிறார் என்ற எண்ணம் மனைவிக்கு ஏற்படும். இதனால் பிரச்சனைகள் சமூகமாக முடியும்.
முக்கியத்துவம்
உங்களுடைய வாழ்க்கைத் துணை உங்களிடம் ஏதேனும் விஷயங்களை பகிர்ந்து கொள்ளும்போது அல்லது உங்களிடம் பேச முயற்சி செய்யும்போது அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் பேசுவதை நீங்கள் கேட்கிறீர்கள் என்பதை உறுதி செய்யுங்கள். நீங்கள் வேறு ஏதேனும் வேலையில் அல்லது சிந்தனையில் இருந்தால் அது அவர்களுக்கு மனதளவில் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் கொடுக்கும். அதனால் உங்களுடைய வாழ்க்கைத் துணை உங்களிடம் பேசும் நேரத்தில் அவர்களுக்கான முக்கியத்துவத்தை கொடுப்பது உங்களின் கடமையாகும்.
பாராட்டுகள்
உங்கள் மனைவி இல்லத்தரசியாக இருந்தாலும் அவரும் நாள் முழுக்க உழைக்கிறார். வீட்டு வேலைகள் ஒன்றும் சாதாரணமானவை கிடையாது. அதனால் அவ்வப்போது அவர்களுடைய சிறு முயற்சிகளை பாராட்டுவது அவசியம். உங்களுடைய கணவர் அல்லது மனைவி செய்யும் விஷயங்களை நீங்கள் கவனிப்பதோடு அதில் அவர்களுடைய உழைப்பை குறிப்பிட்டு பாராட்டுவது முக்கியமானது.
மேலே குறிப்பிட்ட உள்ள விஷயங்கள் மீது கவனம் செலுத்தினாலே பாதி பிரச்சனைகள் கணவன் மனைவிக்குள் குறைகின்றன. உங்களுடைய மனைவி அல்லது கணவர் உங்களுக்காக செய்யும் சிறு சிறு விஷயங்களை அவ்வப்போது பாராட்டுவது, அவர்களுக்கான நேரத்தை உங்கள் மீதான அன்பை புரிந்து கொள்வது உறவே மேலும் பலப்படுத்தும்.