
Note These 7 Things If You Choose Your Partner Through Online Sites : இன்றைய நவீன யுகத்தில் அனைத்துமே ஆன்லைனில் தான் வாங்கப்படுகிறது. பொருளில் தொடங்கி இன்று திருமணத்திற்கு வரனும் கூட ஆன்லைனில் தான் பார்க்கிறார்கள். மேட்ரிமோனியல் சைட்டுகளும் அதிகரித்து விட்டன. சாதி பெயர் தொடங்கி பல்வேறு பேன்சி பெயர்கள் வரை பல மேட்ரிமோனி தளங்கள், செயலிகள் வந்துவிட்டனர். இந்த மேட்ரிமோனியல் தேடலில் சில வரன்கள் தான் உண்மைத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. பல பயனர்கள் பெயரில் தொடங்கப்பட்ட கணக்குகள் போலியானவையாகவும், பொய் தகவல்களுடன் ஏமாற்றும் நோக்குடனும் உலாவி கொண்டிருக்கின்றன. இதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ளது. இந்த பதிவில் ஆன்லைனில் திருமணத்திற்காக வரம் தேடும்போது எந்தெந்த விஷயங்களை கட்டாயம் கவனிக்க வேண்டும் என்பதை குறித்து காணலாம். இந்த விஷயங்களை கவனிப்பதன் மூலம் அந்த பயனர் கணக்கு போலியானதாக இருந்தால் உங்களால் கண்டறிய முடியும்.
நம்பகத்தன்மை
நீங்கள் எந்த திருமண தகவல் இணையதளத்தில் தகவல்களை பதிவு செய்ய விரும்புகிறீர்களோ அதனுடைய நம்பகத்தன்மை ஆராய்வது அவசியம். அந்தத் தளம் எந்த அளவுக்கு உண்மையானது? அதை யார் நடத்துகிறார்கள்? என்பது குறித்து விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து உறவினரிடம், நண்பர்களிடம் ஒரு முறை கேட்டு பார்க்கலாம். இந்த தளத்தை அவர்கள் பயன்படுத்தி உள்ளார்களா? என்பது குறித்து அறிந்து கொள்வது நல்ல விஷயம். அது தவிர அந்த தளத்தை குறித்த ரிவ்யூக்கள், அதைக் குறித்து கூகுளில் வரும் மற்ற விவரங்களை ஆராய்ந்து பின்னர் அதில் பதிவு செய்யலாம். சில தளங்களில் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி கொடுக்கப்பட்டிருக்கும். அந்த முகவரி உங்களுக்கு அருகாமையில் இருந்தால் ஒரு முறை நேரில் சென்று பார்ப்பது நல்லது.
மின்னஞ்சல் முகவரி:
ஆன்லைனில் எதில் பதிவு செய்தாலும் மெயில் ஐடி கேட்கும். மேட்ரிமோனியல் இணைய தளங்களிலும் அதே முறை இருக்கும். இது மாதிரி தளங்களில் பதிவு செய்யும்போது அதற்கென தனி மெயில் ஐடி பயன்படுத்துவது நல்லது. உங்களுடைய தனி பயனர் ஐடியை கொடுக்க வேண்டாம். அதாவது தொழிலுக்காகவா பயன்படுத்தும் ஐடி அல்லது வங்கி கணக்குகளில் கொடுக்கப்பட்ட ஐடியை பயன்படுத்த வேண்டாம். சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் உங்கள் ஐடி மூலம் உங்களுடைய தரவுகளை திருட வாய்ப்புள்ளது.
தகவல்கள்
ஆன்லைனில் வரன் பார்க்கும்போது பொறுமை அவசியம். வரன் குறித்த தகவல்களை பெற்றதும் உடனடியாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்காமல் அந்த தகவல்கள் உண்மையா? என சரி பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் வேலை செய்யும் இடம், படிப்பு, மற்ற விவரங்களை நன்கு விசாரித்து அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பின்னரே அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குடும்ப உறவினர்களுக்கு சொல்லுதல்:
நீங்கள் உங்களுக்காக ஆன்லைனில் வரன் தேடினால் அது குறித்து உங்களுடைய பெற்றோர், குடும்ப உறுப்பினர்களிடம் தகவல் பகிர்ந்து கொள்வது அவசியம். ஏனென்றால் உங்களுடைய பெற்றோர் அவர்களுடைய அனுபவத்திலிருந்து சில விஷயங்களை சொல்வார்கள். உங்களுடைய நண்பர்கள், உறவினர்களும் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.
சந்திக்கும் இடம்;
நீங்கள் உங்களுக்குப் பிடித்த வரனை ஆன்லைன் மூலம் தேர்வு செய்த பின்னர் முதலில் உரையாடல் நடக்கும். பின்னர் நேரில் சந்திக்க முடிவு எடுத்தால் அப்போது முன்னெச்சரிக்கையாக சில விஷயங்களை செய்ய வேண்டும். நீங்கள் கண்டிப்பாக அவர்களை பொது இடத்தில் சந்திப்பது அவசியம். ஏனென்றால் ஆன்லைனில் திரைக்குப் பின்னிருந்து உங்களிடம் உரையாடியது யார்? என்பது குறித்து உங்களுக்கு தெரியாது. நேரில் அசம்பாவிதங்களை தடுக்க பொது இடங்களில் சந்தியுங்கள்.
சந்தேகங்கள்
உங்களுடைய மேட்ரிமோனியல் பக்கத்தில் நீங்கள் பேச தொடங்கினாலும் அல்லது உங்களை விரும்பி ஒருவர் பேச தொடங்கினாலும் சரி அவர்களை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது உங்களுக்கு மனதில் தோன்றும் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
பர்சனல் தகவல், புகைப்படங்கள் பகிர்தல்
ஆன்லைன் மேட்ரிமோனியல் தளங்களில் நீங்கள் வரன் தேடும்போது அவர்களுடன் உங்களுடைய மொத்த தனிப்பட்ட தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. நீங்கள் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவது உறுதியாகும் பட்சத்தில் நேரில் மற்ற விவரங்களை பேசிய பின்னர் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்வது நல்லது. அதற்கு முன்பாக உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை அவர்களிடம் பகிரக்கூடாது. அதுமட்டுமின்றி மேட்ரிமோனியல் தளங்களில் சில தனியுரிமை கோட்பாடுகள் உள்ளன. யார் உங்களின் புகைப்படங்கள் பார்க்க வேண்டும் என்பது அதில் முக்கியமானது. உங்களுடைய புகைப்படங்களை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். புகைப்படங்களை பகிர வேண்டாம். குறிப்பாக உங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் யாருக்கும் பகிர வேண்டாம்.