
Why Wife Getting More Angry After The Baby Born : குழந்தை பிறந்துவிட்டால் கணவன் மனைவி இருவரின் வாழ்க்கையும் முற்றிலுமாக மாறிவிடும். அதிலும் ஆண்கள் பொருளாதார சிக்கலால் அவதிப்படுவது போல, பெண்கள் உளச்சிக்கலால் அவதியுவர். குழந்தை பிறந்த பின் அதிகமாகும் பொறுப்புகள், வாழ்க்கை முறை மாற்றம் அனைத்துமே கொஞ்சம் புதிதாகத் தான் இருக்கும்.
அண்மையில் பக்கத்து வீட்டில் ஒரு சம்பவம் நடந்தது. குழந்தை பெற்ற சில மாதங்களில் அந்தப் பெண் விவாகரத்து வேண்டும் என கேட்டிருந்தார். அவர் சொன்ன காரணம், தன்னுடைய கணவன் தன் உணர்வுகளை குறித்து கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை என்பதுதான். இது ஒருபுறம் இருக்க சிநேதி ஒருத்தி குழந்தை பிறந்த பின்னர் இருவருக்கும் அதிக சண்டை வருவதாகவும், ஏதோ மாறிவிட்டதாக உணர்வதாகவும் தெரிவித்தார். இதன் பின்னணியை அலசி ஆராயும்போது சில விஷயங் தெரிய வந்தன. அதை இங்கு காண்போம்.
பணிச்சுமைகள்:
குழந்தை பிறந்த பிறகு கணவன் மனைவி இருவருக்கும் பொறுப்புகள் அதிகமாகின்றன. குழந்தையை பெற்ற பின்னர் அந்த தாய் தன்னுடைய மொத்த தூக்கச் சுழற்சியின் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அடிக்கடி அழும் குழந்தையை தாலட்டுவது, மணிக்கொரு முறை தாய்ப்பால் ஊட்டுவது, குழந்தை தூங்கும் சில நிமிடங்கள் மட்டுமே தானும் தூங்குவது என ஒரு பெண்ணின் மொத்த வாழ்க்கையும் குழந்தை பிறப்பிற்கு பின்னர் மாறிவிடுகிறது. உடல் எடை அதிகரிப்பு, தூக்கமின்மை, மன அழுத்தம் என உணர்வுரீதியாக அவளுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதை புரிந்துகொள்ளும் துணை தேவைப்படுகிறது. இந்த இடத்தில் தான் கணவன் அவளை புரிந்து கொண்டு அவளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். குழந்தையை பார்த்துக் கொள்ளும் சுழற்சிகளை பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும். இருவரும் பணிச்சுமைகளை பகிர்ந்து கொள்ளும் போது கணவன் தன் மீது அக்கறையாய் இருக்கிறான் என்பதை மனைவியும், மனைவி எந்தெந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறாள் என்பதை கணவனும் புரிந்து கொள்ள முடியும். இது மாதிரி விஷயங்கள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருக்கும் இடைவெளியை குறைக்கிறது.
யார் முக்கியம்?
சில கணவன்மார்கள் மனைவிபடும் துன்பங்களை கண்டு கொள்ளாமல் பெண்தான் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைப்பதுண்டு. இது மாதிரி மனநிலை கணவன் மனைவிக்குள் இடைவெளியை தான் ஏற்படுத்தும். தம்பதிகள் தங்களுடைய குழந்தையை பராமரித்துக் கொள்வதில் சம அளவு பொறுப்புடையவர்கள். உங்களுடைய மனைவி இரவு முழுக்க தூங்காமல் குழந்தையை பார்த்துக் கொள்ளும்போது, "நீ கொஞ்சம் தூங்கு! நான் பார்த்துக்கொள்கிறேன்" என பகிர்ந்து கொள்ளுதல் மிக முக்கியமானது. ஏனென்றால் தூக்கமின்மை மன அழுத்தத்தை அதிகரிக்க கூடும். நன்றாக தூங்கும்போது பெண்கள் தங்களுடைய கோபத்தை குறைக்க வாய்ப்பாக அமையும்.
உரையாடல்
குழந்தையை மாறி மாறி பார்த்துக் கொள்வது கணவன் மனைவிக்கு இடையே நிகழும் உரையாடல்களை குறைக்கலாம். யார் குழந்தையின் பணிகளை செய்ய வேண்டும் என இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் கூட எழலாம். இந்த வாக்குவாதங்கள் உங்களுக்கிடையே இடைவெளியை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் இருவருமே அந்த குழந்தையை பார்த்துக் கொள்ளக்கூடிய பொறுப்பில் இருப்பவர்கள் தான். குழந்தையை பார்த்துக் கொள்வது தவிர உங்களுக்கென்று நீங்கள் நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள யாரேனும் குழந்தையை பார்த்துக் கொள்ளும் நேரத்தில் கணவன், மனைவி இருவரும் வெளியில் கொஞ்ச தூரம் நடைபயிற்சி செல்லலாம். அருகிலுள்ள ஏதேனும் பூங்காக்களில் சிறிது நேரம் அமர்ந்து பேசலாம். உங்களுக்கு என நேரத்தை ஏற்படுத்திக் கொள்வது மனதளவில் உறவை புத்துணர்வாக வைத்துக் கொள்ள உதவும்.
உறவில் நெருக்கம்
குழந்தை பிறந்த பின்னர் பலர் தாம்பத்தியத்தில் கவனம் செலுத்துவதில்லை. குழந்தையை பார்த்துக் கொள்ளும் போது இது மாதிரியான விஷயங்களில் ஆர்வம் வருவது கிடையாது. சோர்வான நேரங்களில் தூங்குவதற்கு மட்டுமே மனம் விரும்பும். ஆனால் அவ்வப்போது தாம்பத்தியத்திற்கென நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடனும் அன்புடனும் உறவு மேற்கொள்வதில் கவனமாக இருங்கள். இது உங்களுக்கிடையான இடைவெளியை குறைக்கும்.
புரிதல்
கணவன் மனைவி இருவருக்கு இடையிலும் மிக முக்கியமாக இருக்க வேண்டியது புரிதல் தான். ஒருவருக்கொருவர் தங்களுடைய தேவைகளையும் விருப்பங்களையும் அவ்வப்போது தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. இதற்கென தனி வகுப்புகளுக்கு செல்ல வேண்டியதில்லை. கணவன் மனைவி இருவரும் அர்த்தமுள்ள உரையாடல்களை அவ்வப்போது நிகழ்த்துவது போதுமானது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே தங்களுடைய உணர்வுகளை குறித்த வெளிப்படைத் தன்மை அவசியம். பொருளாதார சிக்கல், வேலைப் பளு, தூக்க சுழற்சியில் மாற்றம் என அனைத்தும் நீங்கள் பேசி புரிந்துகொள்ள வேண்டும். குழந்தை பிறந்த பிறகு உங்களுடைய வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன; அதை நீங்கள் எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பது குறித்து ஒருவருக்கொருவர் உரையாடுவது அடுத்த கட்டத்திற்கு நீங்கள் செல்ல வழிவகுக்கும்.