
கள்ளக்காதல் எனச் சொல்லக் கூடிய திருமணத்தை மீறிய உறவுகள் ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவதில்லை. அவை நாளடைவில் உருவாகக் கூடியது. இந்த உறவுக்குள் செல்லும் நபர்கள் அதற்கு முன்னதாக சில காரியங்களைச் செய்வார்கள். அவர்களை அறியாமல் வெளிப்படும் இந்த சிக்னல்களை வாழ்க்கைத்துணை கண்டுபிடித்துவிட்டால் முன்கூட்டியே ஒரு துரோகத்தில் இருந்து தப்பலாம்.
நேரம் தாழ்த்துதல்
உங்கள் கணவர் இரவில் வீட்டுக்கு தாமதமாக வருவதை திடீரென வழக்கப்படுத்தினால் அது சாதாரண விஷயம் அல்ல. வழக்கமாக வரும் நேரத்தை விட அதிக நேரம் தாமதமாக வருதல். விடுமுறை நாட்களிலும் வேலை இருப்பதாகச் சொல்லி வெளியே கிளம்பினால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். இதுவே அவர்கள் புதிய நபருடன் அல்லது வேறொரு நபருடன் நேரம் செலவழிக்கத் தொடங்கும் காலமாக இருக்கலாம்.
செல்போன் பாஸ்வேர்ட்
ரகசியங்களின் புகலிடம் செல்போன். அதை உங்களிடம் தராமல் தவிர்த்தால் ஏதோ குளறுபடி இருப்பது உறுதி. புதிய பாஸ்வேர்ட்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். தங்களுடைய புதிய துணையின் விவரங்களை மற்றவர்கள் பார்த்துவிடுவார்கள் என்ற பாதுகாப்பின்மை உணர்வினால் செல்போனை யாரிடமும் தர மாட்டார்கள். அவர்களால் வெளிப்படையாக இருக்க முடியாது. குறிப்பாக மனைவிக்கு தன்னுடைய பாஸ்வேர்ட் தெரிந்த பின்னர் மீண்டும் பாஸ்வேர்டை மாற்றுவார்கள்.
உண்மைகளை மறைத்தல்
கள்ளக்காதலில் ஈடுபட துணியும் ஆண்கள் தாங்கள் சந்திக்கும் நபர்களைக் குறித்து பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். தினமும் பொய் சொல்ல ஆரம்பிப்பார்கள். சில உண்மைகளை மறக்க தயங்கமாட்டார்கள். உங்களுக்கு முன் எந்த செல்போன் அழைப்பையும் எடுத்து பேசமாட்டார்கள். போனை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறி விடுவார்கள். புதிய விஷயங்களை செய்ய தொடங்குவார்கள். ஆடையில் தொடங்கி தோற்றம் போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். காதல் ஸ்டேட்டஸுகளை தனித்துவமான எமோஜியில் போடுவது, அதிக புகைப்படங்கள் எடுப்பது என சில உற்சாகமாகக் காணப்படுவார்கள்.
புதிய பழக்கங்கள்
சில ஆண்கள் தங்களுக்கு பிடிக்காத விஷயங்களை கூட கள்ளக்காதலில் ஈடுபடும் போது செய்வார்கள். உதாரணமாக பிடிக்காத உடைகளை உடுத்துவது, உணவுப் பழக்கம், புதிய ஹேர் ஸ்டைல் என புதிய பழக்கங்களை கற்றுக் கொள்வதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவை சாதாரணமாக விஷயங்களாக இருந்தாலும் திடீரென இது மாதிரி புதிய விஷயங்களில் ஈடுபடுவது சற்று கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
நடத்தை மாறுதல்
தங்களுடைய குணநலன்களை திடீரென ஒரு ஆண் மாற்றுவது சாதாரண விஷயம் கிடையாது. புதிய நபர் வாழ்க்கையில் வரும்போது கண்டிப்பாக நடத்தையில் மாற்றம் வரும். வாழ்க்கைத் துணையை விமர்சிப்பது, வீட்டில் உள்ளவர்களுடன் எப்போதும் சிடுசிடு என பேசுவது கள்ளக்காதலில் ஒரு ஆரம்ப அறிகுறி. குடும்பம் இருந்தும் இல்லாதது போல இருப்பது, குடும்ப புகைப்படங்களை பகிர்வதை தவிர்ப்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
தோற்றப் பொலிவு
மேலே சொன்னபடி ஆண்கள் தங்களுடைய தோற்றத்திற்கு திடீரென முக்கியத்துவம் கொடுப்பது எதார்த்தமான விஷயமல்ல. தங்களை இளமையாக காட்டிக் கொள்வது, தொப்பையை குறைக்க உடற்பயிற்சிகள் செய்வது போன்றவற்றை திடீரென எந்த காரணமும் இன்றி ஒரு ஆண் தொடங்கினால் அதை மனைவிகள் கண்காணிக்க வேண்டும். சில ஆரோக்கிய நோக்கங்களுக்காக செய்யலாம். ஆனால் எல்லோரும் அப்படியல்ல.
நெருக்கம்
உங்களிடம் அன்பாக நடந்துகொள்ளாமல் எப்போதும் அதிருப்தியாக இருந்தால், பாலியல் நெருக்கத்தைத் தவிர்த்தால் உங்களுடையை வாழ்க்கைத் துணைக்கு வேறொருவர் மீது ஆர்வம் வந்துவிட்டது என அர்த்தம். புதிய நபர் மீது ஆர்வம் இருந்தால்தான் உங்கள் மீது ஆர்வம் குறையும். நெருக்கத்தை தவிர்ப்பார்கள். சில ஆண்கள் இந்த குற்ற உணர்ச்சியினால் உட**வு வைத்துக் கொள்ளாமல் தவிர்க்கலாம். ஆனால் சில ஆண்கள் உங்களிடம் அன்பாகவும் அரவணைப்பாவும் நடந்து கொள்ளாமல், வெறும் உட***க்காக மட்டும் உங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் ஒரு சில அறிகுறிகளை வைத்து முடிவு செய்யாமல் அனைத்து அறிகுறிகளையும் கவனித்து பாருங்கள்.
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பதுபோல உங்கள் கணவர் தப்பானவர்தான் என்ற எண்ணத்தில் பார்த்தால் எல்லாமே தவறாகத் தெரியும். முன்முடிவுகளின்றி எதார்த்தமாக கவனியுங்கள்.