
காதல் என்ற உணர்வுக்கு வார்த்தையில் சொல்ல முடியாதது. பாலினம், மதம், வயது என பல விஷயங்களைக் கடந்து காதல் வாழ்ந்து வருகிறது. ஆனால் திருமணமானவர்களுடன் வரும் காதலை அப்படி ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் ஏற்படும் விளைவுகள் மோசமானவை. திருமணத்தை மீறிய உறவுகள் தவிர்க்கப்பட வேண்டியவை.
இந்நிலையில் பெண்கள் திருமணமான ஆணுடன் காதல்வயப்படுவது இப்போது அதிகம் நடந்துவருகிறது. பல பெண்கள் தங்கள் அறியாமலே இந்தக் காதல் சுழலில் சிக்கிவிடுகின்றனர். பெண்கள் இந்த தவறை செய்ய என்ன காரணம் என்பதை இங்கு காணலாம்.
பெண்கள் ஓர் ஆணின் அக்கறைக்கு மயங்குகிறார்கள். தங்கள் மீது கவனம் செலுத்தும் ஆண்களை அவர்களுக்கு அதிகம் பிடிக்கிறது. பொதுவாக திருமணமான ஆண்கள், திருமணம் செய்யாத ஆண்களை விடவும் அதிகமாக மென்மையாக நடந்துகொள்கிறார்கள். அக்கறையை வெளிப்படுத்துகிறார்கள்.
அதிலும் 30 வயதை கடந்த ஆண்கள் பக்குவப்பட்டு விடுகிறார்கள். அதனால் பெண்களை கையாள அவர்களுக்கு தெரிந்திருக்கும். இதில் சில பெண்கள் ஈர்க்கப்படுகிறார்கள். இங்கு வெறும் ஈர்ப்பையும், காதலையும் பல பெண்கள் குழப்பிக் கொள்கிறார்கள். ஈர்ப்பும் மோகமும் தற்காலிகமானவை. இதில் உணர்ச்சிரீதியான தொடர்பு இருப்பதில்லை. வெறும் த்ரில் வேண்டுமென்றால் கிடைக்கும்.
திருமணமான ஆண்கள் மீது காதல் கொள்ளும் பெண்கள் சுயமரியாதை, சுய மதிப்பை பெரிதாக எண்ணுவதில்லை. அவர்கள் ஏற்கனவே பழைய உறவில் காயப்பட்டிருப்பார்கள். அங்கீகாரத்திற்கும், அன்புக்கும் ஏங்குவார்கள். அதனால் புதியதாக கிடைக்கும் உறவுக்காக தங்களை மாற்றிக் கொள்ள துணிவார்கள். தங்களுடைய சொந்த விருப்பங்களை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். சில ஆண்கள் இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
திருமணமான ஆண்கள் மீது காதல் கொள்ளும் பெண்கள் தனிமையில் இருக்க அஞ்சுகிறார்கள். என்றாவது ஒருநாள் தங்களுக்கான அன்பைக் கண்டுபிடிக்கும் நோக்கில் அந்த உறவை பற்றிக் கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் இந்த உறவில்தான் அதிகமாகம் காயப்படும் சாத்தியமுள்ளது.
பெண்களே!
திருமணமான ஆணிடம் காதல்வயப்பட்டால் யோசிக்காமல் பின்வாங்குங்கள். உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் முக்கியம். தனிமை பயமாக இருந்தால் நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கலாம். அதற்கு வழியில்லை என்றால் பிடித்த பொழுதுபோக்குகளுடன் நேரத்தை செலவிடுங்கள். திருமணமான ஆணை காதலிப்பது தீர்வல்ல.
எந்த உறவாக இருந்தாலும் சுயமரியாதை அவசியம். வெறும் ஈர்ப்பையும் மோகத்தையும் காதல் என நம்பவேண்டாம். காதல் அதையும் தாண்டி, உங்களை உணர்வுரீதியாக சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் உணரச் செய்யும்.