
பொதுவாக விடுமுறை நாட்களில் நம் அனைவரது வீடுகளிலும் அசைவம் என்பது தவறாமல் இருக்கும். அதிலும் பலரது விருப்ப அசைவ உணவாக முதலில் இடம்பெறுவது சிக்கன் தான். சிக்கனை நாம் ஹோட்டல்களிலும் வீடுகளிலும் பல ரெசிபி படி செய்து பார்த்து சுவைத்திருப்போம். ஆனால் இதில் புதிய ஒரு முறையை தான் பார்க்க போகிறீர்கள். அதற்கு முன் சிக்கனில் இருக்கும் சத்துக்கள் என்ன என்பதை பார்ப்போம்.
சிக்கனில் உள்ள சத்துக்கள்
பொதுவாக உடலை நல்ல கட்டுகோப்பாக வைக்க விரும்புவோர்கள், ஜிம் சென்று ஒர்க் அவுட் செய்பவர்களின் அன்றாட உணவில் சிக்கன் கண்டிப்பாக இடம் பெறும். ஏனெனில் சிக்கனில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. சிக்கன் சாப்பிடுவதால் எடை மேலாண்மை, தோல் ஆரோக்கியம், எலும்பு வலு, இதய ஆரோக்கியம் போன்ற நன்மைகள் கிடைக்கும்.
வைட்டமின்கள் B6, B12, நியாசின் சத்துக்களும், தாதுக்கள் மெக்னீசியம், செலினியம், துத்தநாகம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் புரதம் நிறைந்து காணப்படுகிறது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த சிக்கனை எப்படி ருசியாக சமைக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - கால் கிலோ
இஞ்சி, பூண்டு - தேவையான அளவு
எலுமிச்சை - பாதி
கான் பிளவர் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்பொடி - இரண்டரை ஸ்பூன்
தனியா பொடி - 2ஸ்பூன்
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
சிக்கன் மசாலா - 2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, இலவங்கம், ஏலக்காய் தலா 1
எண்ணெய் - தேவைக்கேற்ப
தண்ணீர் தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் அதில் 1 ஸ்பூன் மிளகாய் பொடி, 1 ஸ்பூன் தனியா பொடி, தேவைக்கேற்ப கான்பிளவர் மாவு, இஞ்சி, பூண்டு விழுது தேவைக்கேற்ப, சிறிது உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி அரைமணி நேரம் ஊறவைக்கவேண்டும். பின்னர் பொரிக்க தேவையான எண்ணெய் (சிக்கன் மூழ்கும் அளவுக்கு எண்ணெக் ஊற்ற வேண்டாம்) ஊற்றி அடுப்பை மிதமான தீ வைத்து பொரித்து எடுக்க வேண்டும். (சிக்கன் பாதி வெந்தால் போதுமானது) பொரித்த அதே எண்ணெய்யில் பட்டை, கிராம்பு, இலவங்கம், ஏலக்காய், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பின்னர் தக்காளி சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர், ஒன்றரை ஸ்பூன் மிளகாய் பொடி, 1 ஸ்பூன் தனியா பொடி, 2 ஸ்பூன் சிக்கன் மசாலா, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக 10 நிமிடம் கிளறி விடவேண்டும். (மிதமான தீயில்) பின்னர் அதனுடன் பொரித்து வைத்த சிக்கனை சேர்த்து சிறுது தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி ஒரு மூடி போட்டு 5 நிமிடம் வேக வைத்தால் சுவையான சிக்கன் கிரேவி தயார்.