Banana Dosa :இந்த பதிவில் வாழைப்பழத்தை வைத்து தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே, பெரும்பாலான இந்திய வீடுகளில் காலை இரவு உணவாக இட்லி தோசை தான் இருக்கும். காரணம் இவை செய்வதற்கு ரொம்பவே சுலபமாக இருக்கும் அதிக நேரம் எடுக்காது மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில், இன்று காலை உங்கள் வீட்டில் தோசை செய்ய போகிறீர்களா? அப்படியானால், உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வாழைப்பழத்தை வைத்து தோசை செய்து கொடுங்கள்.
பொதுவாகவே நாம் வாழைப்பழத்தில் பலவிதமான ரெசிபிகளை செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால், வித்தியாசமான முறையில் இன்று வாழைப்பழம் வைத்து தோசை செய்து சாப்பிடுங்கள். இந்த தோசை சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு ரொம்பவே சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக, இது ஆரோக்கியமானதும் கூட. உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் வாழைப்பழத்தை வைத்து தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: 15 நிமிடத்தில் சத்தான மொறு மொறு ஓட்ஸ் தோசை.. டயட்டில் இருப்பவர்களுக்கு ரொம்பவே நல்லது..!
வாழைப்பழ தோசை செய்ய தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 3
கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் - 1 கப் (துருவியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
முந்திரி பருப்பு - 1 ஸ்பூன் ( பொடியாக நறுக்கியது)
பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன்
பால் - 1 கப்
உப்பு - சுவைக்கு ஏற்ப
நெய் (அ) எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: வித்தியாசமான சுவையில் சத்தான புதினா கொத்தமல்லி தோசை.. ரெசிபி இதோ..!
செய்முறை:
வாழைப்பழம் தோசை செய்ய முதலில், எடுத்து வைத்த வாழைப்பழத்தை வட்ட வடிவில் மெல்லியதாக வெட்டிக் கொள்ளுங்கள். பிறகு அவற்றை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அதனுடன் துருவிய வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், முந்திரி பருப்பு, பேக்கிங் சோடா, சுவைக்கு ஏற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அதில் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலக்கவும். இதனுடன் பாலையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். மாவானது ரொம்ப கெட்டியாகவோ, தண்ணியாகவோ இருக்காமல், தோசை ஊற்றும் பதத்திற்கு இருக்க வேண்டும். பிறகு, அதை மூடி வைத்துவிட்டு சுமார் 10 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.
இதனை அடுத்து ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் அல்லது நெய் தடவி பின் தயாரித்து வைத்த வாழைப்பழ தோசை மாவை ஒரு கரண்டி அதில் வட்ட வடிவில் ஊற்றவும். தோசையை இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு நன்றாக வேக வைத்து எடுத்தால் அருமையான ருசியில் சத்தான வாழைப்பழ தோசை ரெடி. இந்த வாழைப்பழ தோசையை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது நீங்கள் விரும்பும் ஏதாவது சட்டியுடன் வைத்தும் கூட சாப்பிடலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D