Pongal Recipes 2023: பொங்கல் கொண்டாட்டங்களில் சற்று வித்தியாசமாக இந்த இனிப்பு வகைகளை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படும். சர்க்கரை பொங்கலும், வெண் பொங்கலும் பொங்கல் பண்டிகையில் பெரும்பாலானோர் வீடுகளில் செய்யப்படும். அதனை அக்கம்பக்கத்து வீட்டாருடனும் பகிர்ந்து கொள்வார்கள். இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இந்த இனிப்பு வகைகளையும் செய்து பாருங்கள்.
பீட்ரூட் ஜாமூன்
இந்த ஜாமூனை 20 நிமிடங்களில் செய்துவிடலாம். இதனை செய்ய குறைந்த செலவிலான பொருள்களே தேவைப்படும். 160 கிராம் குலோப் ஜாமூன் மிக்ஸ், 800 மிலி தண்ணீர், 800 கிராம் சர்க்கரை ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள். வாசனைக்காக ஏலக்காய் தூள், கால் கப் பீட்ருட் சாறு, எண்ணெய், நெய் ஆகியவை. குலோப் ஜாமூன் மாவினை இரண்டு பாகங்களாக பிரித்து கொள்ளுங்கள். ஒன்றில் நெய்யும், பீட்ரூட் சாறும் ஒன்றன் பின் ஒன்றாக கலந்து பிசையுங்கள். மற்றொரு பாகத்தில் தண்ணீரும் நெய்யும் கலந்து பிசையுங்கள்.
இதை ஒருபுறம் வைத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் ஆகியவை சேர்த்து கொதிக்க வைத்து எடுத்து கொள்ளுங்கள். பிசைந்து வைத்த மாவில் ஒரு பாகத்தை லேயர் போலவும் மற்றொரு பாகத்தை உருண்டையாகவும் உருட்டி ஒன்றாக சேர்த்துவிடுங்கள். எண்ணெய்யை காய வைத்து அதில் உருண்டைகளை போட்டு எடுங்கள். அதனை தயாரித்து வைத்துள்ள பாகில் போட்டால் பீட்ரூட் ஜாமூன் தயார்.
இதையும் படிங்க; கோர்ட் கேஸ்னு இழுபறியாக கிடக்கும் சொத்தை மீட்க இப்படி விளக்கேற்றுங்கள்!
பால் போளி
இந்த பால் போளியை போகி பண்டிகையில் செய்யலாம். இதற்கு ஆறு கப் பால், நெய், ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர், ஒரு கப் கோதுமை மாவு, எண்ணெய், கொஞ்சம் குங்குமப்பூ, பொடித்த பிஸ்தா, கால் கப் சர்க்கரையை எடுத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் மாவினை எடுத்து அதனுடன் நெய் கலந்து கொஞ்ச கொஞ்சமாக மிதமான சூட்டில் உள்ள பாலை கலந்து மாவை பிசையுங்கள்.
இதனை நன்றாக பிசைந்தால் தான் பூரி மென்மையாக வரும். தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். இதனை துணியால் மூடி வைத்து கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் மாவு ஊறின பின்னர் சிறு உருண்டையாக உருட்டி பூரியாக உருட்டுங்கள். எண்ணெய்யில் பூரியை பொறித்து எடுத்து கொள்ளுங்கள். சிறிய பாத்திரத்தில் சூடான நீரை ஊற்றி குங்குமப்பூவை கரைத்து கொள்ளுங்கள். மிதமான சூட்டில் பாலை கொதிக்க வைத்து அதில் இனிப்புக்காக சர்க்கரை, குங்குமப்பூ, வாசனைக்காக ஏலக்காய் தூள் போன்றவற்றை போட்டு கலக்கிவிடுங்கள். இந்த பாலை இறக்கி அதில் பூரிகளை ஊற வையுங்கள். இதனை அரை மணி நேரத்திற்கு பிறகு பொடித்த பிஸ்தாவை தூவி பரிமாறுங்கள்.
இதையும் படிங்க; அதிகம் குடித்தால் புற்றுநோய் தாக்கும் அபாயம்! ஒயின் குடிப்பது நல்லதா? கெட்டதா?