ஆந்திரா ஸ்டைல் "புடலங்காய் பச்சடி" செய்யலாமா?

By Dinesh TG  |  First Published Nov 19, 2022, 10:37 PM IST

இன்று நாம் புடலங்காய் வைத்து சுவையான புடலங்காய் தயிர் பச்சடியை எப்படி எளிமையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


வழக்கமாக நான் பிரியாணி, சப்பாத்தி,பரோட்டா போன்றவற்றிக்கு குருமா, சால்னாவுடன் ரைத்தா எனப்படும் பச்சடி வைத்தும் சாப்பிடுவோம். பொதுவாக வெங்காய பச்சடி, கேரட் பச்சடி,காராபூந்தி பச்சடி, வெள்ளரி பச்சடியை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். புடலங்காய் வைத்து பச்சடி செய்துள்ளீர்களா? இல்லையா? அப்படியென்றால், புடலங்காய் பச்சடியை எப்படி செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம் வாங்க.

புடலங்காய் போன்ற நீர் காய்களை நம்மில் பெரும்பாலானோர் பொரியல், கூட்டு ஆகிய இரண்டை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்பார்கள். இன்று நாம் புடலங்காய் வைத்து சுவையான புடலங்காய் தயிர் பச்சடியை எப்படி எளிமையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

புடலங்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:

புடலங்காய்- மீடியம் சைஸ் 1
தயிர்-1 கப் 
பச்சை மிளகாய் -5
இஞ்சி-1 இன்ச் 

தாளிப்பதற்கு:

எண்ணெய்- 1 ஸ்பூன் 
கடுகு-1/4 ஸ்பூன் 
வெந்தயம்-1/4 ஸ்பூன் 
உளுந்தம் பருப்பு-1/4 ஸ்பூன் 
கடலைப்பருப்பு-1/4 ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் -2 
பெருங்காயத்தூள்-1 சிட்டிகை 
மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன் 
உப்பு-தேவையான அளவு 

க்ரில்ட் பொட்டேட்டோ இனி குழந்தைகள் கேட்டால், வீட்டிலேயே செய்து கொடுத்து அசத்துங்க!

செய்முறை:

முதலில் புடலங்காயை அலசி விட்டு, தோல் நீக்கி பின் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு மிக்சி ஜாரில் தோல் சீவிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நீர் தெளித்து கொரகொரவென அரைத்துக் கொண்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் 1 பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, கடலைப் பருப்பு,வெந்தயம், உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்துக் கொண்டு, பின் கருவேப்பிலை,பெருங்காயத்தூள் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.

அந்த பானில் இப்போது பொடியாக அரிந்து வைத்துள்ள புடலங்காயை சேர்த்து வதக்க வேண்டும். இது நீர்க் காய் என்பதால் இதில் இருந்து வரும் தண்ணீரே போதுமானது. 

இப்போது புடலங்காயில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு தூவி, பின் அரைத்து வைத்துள்ள மிளகாய் இஞ்சி விழுதினை சேர்த்து கிளறி விட்டு, ஒரு தட்டு போட்டு மூடி, 3 நிமிடங்கள் வரை வதக்கி விட்டு பின் அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். ஆறிய பிறகு, இந்த புடலங்காய்களை வேறொரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது பௌலில் தயிர் சேர்த்து,கையளவு பொடியாக அரிந்த வெங்காயத்தையும் சேர்த்து,ஒரு முறை உப்பு சரி பார்த்து விட்டு, (தேவையென்றால் உப்பு போட்டு) கிண்ணத்தில் உள்ளவற்றை நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அவ்ளோதாங்க ஈஸியான புடலங்காய் தயிர் பச்சடி ரெடி!!!

click me!