சுவையான பன்னீர் ஆம்லெட்டை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய மற்றும் சுவை மிகுந்த உணவு வகைகளில் பன்னீரும் ஒன்று. இதனை எப்படி செய்து கொடுத்தாலும் குழந்தைகள் அனைத்தையும் சமத்தாக சாப்பிட்டு முடிப்பார்கள். பன்னீரானது சுவை மிகுந்த உணவு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் நமக்கும் அளிக்கும். எனவே வளரும் குழந்தைகளுக்கு பன்னீர் சேர்ந்த உணவுகளை நாம் செய்து கொடுக்கலாம்.
பன்னீரில் அதிகமாக கால்சியம் இருப்பதால் எலும்புகளை வலுவடைய வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள் தொடர்ந்து பன்னீரை உணவில் எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். இது தவிர வலுவான பற்களை பெற பன்னீர் பெரிதும் துணை புரிகிறது.
பன்னீர் வைத்து பன்னீர் கிரேவி, பன்னீர் டிக்கா, பன்னீர் மசாலா, பன்னீர் 65 என்று இன்னும் பல விதமான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் பன்னீர் வைத்து சுவையான பன்னீர் ஆம்லெட் செய்ய உள்ளோம்.
இதனை பள்ளி முடித்து சோர்ந்து வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் இந்த ஆம்லெட்டை சாப்பிட்டு உற்சாகமாக இருப்பார்கள்.
வாருங்கள்! சுவையான பன்னீர் ஆம்லெட்டை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் – 2 க்யூப்ஸ்
முட்டை – 1 அல்லது 2
மிளகுத்தூள் - 1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1/2
சின்ன வெங்காயம் -2
மல்லித்தழை- சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
குழந்தைகள் விரும்பும் "வெண்ணிலா கப் கேக்" வீட்டிலேயே செய்யலாம் வாங்க!
செய்முறை
முதலில் பன்னீரை துருவிக் கொண்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், மல்லித்தழை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக அரிந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, பீட்டர் கொண்டு நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும். முட்டை உள்ள கிண்ணத்தில் மிளகுத்தூள், உப்பு, பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதே கலவையில் துருவி வைத்துள்ள பன்னீரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து தோசைக்கல் சூடான பின்பு, முட்டை கலவையை கொஞ்சம் ஊற்றி, அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து விட்டு, சுற்றி எண்ணெய் சேர்த்து முட்டையை ஒரு பக்கம் வேக வைக்க வேண்டும். ஒரு புறம் வெந்த பிறகு, மறு பக்கம் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி பரிமாறினால் சுவையான பன்னீர் ஆம்லெட் ரெடி!