அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கிய ஸ்னாக்ஸ் "கேழ்வரகு தட்டை"

By Dinesh TGFirst Published Dec 16, 2022, 10:12 AM IST
Highlights

ஊட்டசத்து கொண்ட கேழ்வரகை வைத்து மொறுமொறுப்பான தட்டை செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

ஊட்டச்சத்து மிகுந்த தானியங்களில் கேழ்வரகு எனப்படும் ராகியும் ஒன்றாகும். கேழ்வரகு வைத்து களி, கூழ் ,தோசை, அடை என்று பல வகையான ரெசிபிக்களை செய்ய முடியும். எப்படி செய்து சாப்பிட்டாலும் இதன் முழுமையான சத்து நமக்கு கிடைக்கும்.அந்த வகையில் இன்று நாம் கேழ்வரகு வைத்து சுவையான ஒரு தட்டை ரெசிபியை செய்ய உள்ளோம். 

இந்த ரெசிபி சிறியவர்கள் , இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற ஒரு ரெசிபி என்று கூறலாம். மேலும் இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் பாக்ஸில் வைத்து கூட அனுப்பலாம். வாருங்கள்! ஊட்டசத்து கொண்ட கேழ்வரகை வைத்து மொறுமொறுப்பான தட்டை செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள் : 

கேழ்வரகு - 1/2 கிலோ
அரிசிமாவு-100 கிராம் 
வறுத்த உளுந்து - 50 கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
மிளகாய்த் தூள்- 1/2 ஸ்பூன் 
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சுத்தம் செய்து வைத்துள்ள கேழ்வரகை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த கேழ்வரகை ஆற வைத்து கொண்டு அதனை அரைத்து மாவு செய்து கொள்ள வேண்டும்.

அதே கடாயில் உளுந்து சேர்த்து வறுத்துக் கொண்டு அதனையும் ஆறிய பின் அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,அரைத்த கேழ்வரகு மாவு மற்றும் உளுந்து மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

பின் அந்த மாவினில் கடலைப் பருப்பு, உப்பு மற்றும் மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொண்டு ஒரு 1/2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

பின் பிசைந்த மாவினை கையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து தட்டை போன்று தட்டி ஒரு பெரிய தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின் தட்டி வைத்துள்ள தட்டைகளை ஒவ்வொன்றாக போட்டு அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து விட வேண்டும்.

பின் தட்டைகள் ஒரு பக்கம் பொரிந்த பிறகு, மறுபக்கம் திருப்பி போட்டு பொரித்து எடுத்து, எண்ணெய் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.  அவ்ளோதான்! ஊட்டச்சத்தான கேழ்வரகுத் தட்டுவடை ரெடி. !!!இதை பக்குவமாக காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்தால் 1 வாரம் வரை கூட வைத்து சாப்பிடலாம். 

click me!