கார்த்திகை திருநாள் அன்று தித்திப்பான பலாப்பழ பாயசம் செய்து பாருங்கள்!

By Dinesh TGFirst Published Dec 1, 2022, 6:06 PM IST
Highlights

தித்திப்பான பலாப்பழம் பாயசம் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கமாக வீட்டின் விஷேஷ தினங்களில் அல்லது பண்டிகை தினங்களில் நாம் பாசிப்பருப்பு பாயசம், சேமியா பாயசம்,அவல் பாயசம், ஜவ்வரிசி பாயசம்,அரிசி பாயசம் போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம்.

என்றாவது இந்த பாயச வகைகளை தவிர்த்து வேறு ஏதேனும் புதுமையான பாயசம் செய்துள்ளீர்களா? அதுவும் பழங்களை வைத்து பாயசம் செய்து பார்த்துள்ளீர்களா? குறிப்பாக பலாப்பழம் வைத்து பாயசம் செய்துள்ளீர்களா? 

பலாப்பழம் என்றவுடன் அதன் தித்திப்பான இனிப்பு சுவை தான் நமக்கு நினைவில் வரும். அதை வைத்து பாயசம் செய்தால் எப்படி இருக்கும். இந்த பலாப்பழம் பயசத்தை ஒரு முறை செய்து பாருங்கள். பின் அனைத்து விஷேஷ தினங்களிலும் இதனையை செய்யும் படி வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். 

வாருங்கள் தித்திப்பான பலாப்பழம் பாயசம் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள் 

பலாப்பழ சுளை -15
வெல்லம் -100 கிராம் 
தேங்காய்பால்- 2 கப் 
ஏலக்காய் தூள் -1/2 ஸ்பூன் 
நெய்-2 ஸ்பூன் 
பிஸ்தா-5
முந்திரி பருப்பு-10 
உளர் திராட்சை-5
தண்ணீர்- தேவையான அளவு 

சேலம் புகழ் தட்டு வடை - செய்யலாம் வாங்க

செய்முறை:

முதலில் பலாப்பழத்தில் இருந்து அதன் கொட்டைகளை எடுத்து விட்டு தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் 2 சுளைகளை மட்டும் மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

தேங்காயை துருவி, அதனை மிக்சி ஜாரில் போட்டு தேங்காய் பால் எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி, கொட்டை எடுத்த பலாப்பழ சுளைகளை போட்டு நன்றாக வேக வைத்துக் கொண்டு, பின் அதனை ஆற வைத்து விட்டு, பின் வெந்த பலாப்பழங்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் மற்றொரு பாத்திரம் வைத்து அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி துருவிய வெல்லம் சேர்த்து பாகு செய்து கொண்டு அடுப்பினை ஆஃப் செய்து விட்டு , வெல்ல பாகினை ஒரு கிண்ணத்தில் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் நெய் சேர்த்து, நெய் உருகிய பின் முந்திரி,பிஸ்தா மற்றும் உளர் திராட்சை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் வடிகட்டிய வெல்லப் பாகை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் அரைத்த பலாப்பழ பேஸ்ட் சேர்த்து, அதனுடன் தேங்காய் பால் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

கொதித்த பின், அடுப்பை ஆஃப் செய்து வைத்து, இறுதியாக வறுத்த முந்திரி,பிஸ்தா,உளர் திராட்சை மற்றும் பொடியாக அரிந்து வைத்துள்ள பலாப்பழ சுளை சேர்த்து ஒரு முறை கலந்து விட்டால் தித்திப்பான பலாப்பழம் பாயசம் ரெடி!

click me!