அருமையான ஐயப்பன் கோவில் அரவண பாயாசம் செய்யலாம் வாங்க!

By Dinesh TGFirst Published Dec 4, 2022, 2:12 PM IST
Highlights

இன்று நாம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் அரவணப் பாயாசத்தை தான் இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

ஒவ்வொரு கோவிலிலும் ஒரு வகையான பிரசாதம் வழங்குவார்கள். உதாரணமாக திருப்பதி என்றால் லட்டு, பழனி என்றால் பஞ்சாமிர்தம் என்று சொல்லலாம். அந்த வகையில் இன்று நாம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் அரவணப் பாயாசத்தை தான் இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கார்த்திகை மாதத்தில் பல்லாயிரக்காண பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்து வீடு திரும்புவார்கள். அங்கு வழங்கப்படுகின்ற அரவணப் பாயாசம் மிகவும் ஸ்பெஷலான ஒரு பாயசம் ஆகும். இதன் கமகம வாசனை ஆளை மயக்கும் வகையில் இருக்கும். வாருங்கள் ஐயப்ப கோவிலின் ஸ்பெஷல் பிரசாதமான அரவணப் பாயாசத்தை வீட்டில் சுவையாக எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இனி வீட்டில் ஏதாவது விஷேஷம் என்றால் வழக்கமாக செய்கின்ற பாயசத்தை செய்யாமல் இந்த அரவண பாயசம் ஒரு முறை செய்து பாருங்கள். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இதன் சுவை அருமையாக இருக்கும். மேலும் இதில் வெல்லம் சேர்த்து செய்வதால் உடம்பிற்கு தேவையான சக்தியையும் தருகிறது. 

தேவையான பொருட்கள் 

வெல்லம் - 1 கிலோ
புழுங்கலரிசி - 200 கி
நெய் - 250 மில்லி
ஏலக்காய்த்தூள் -3 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

பாரம்பரிய முறையில் ''கம்பு அடை'' செய்யலாம் வாங்க!

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் புழுங்கலரிசியை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கிட்டத்தட்ட 3 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.பின் வெல்லத்தை துருவி ,அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். 

வெல்லம் கரைந்த பிறகு, மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ள வேண்டும். வடிகட்டிய இந்த வெல்ல கரைசல் உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து தீயினை சிம்மில் வைத்து காய்ச்ச வேண்டும்.

வெல்லம் பாகு பதம் வந்த பிறகு, அதில் ஊற வைத்துள்ள அரிசியைச் சிறுக சிறுக சேர்த்து விட வேண்டும். அடுப்பின் தீயினை மிதமாக வைத்து கைவிடாமல் தொடர்ந்து கிளறி கொண்டே இருக்க வேண்டும். 

அதிகமாக வெந்து குழையாமல் பார்த்து பக்குவமாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி வெந்து பாதியாக உடையும் நேரத்தில் நெய் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் நன்றாக கலந்து விட வேண்டும். 

கலவை கொஞ்சம் கெட்டியாக வந்த பிறகு ,அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும். நெய் வாசனையில் வீடு முழுவதும் கம கம வாசனையில் ஐயப்ப கோவிலின் ஸ்பெஷல் பிரசாதமான அரவண பாயசம் ரெடி!!!

இந்த பாயசம் பார்ப்பதற்கு அரை வேக்காடாக இருந்தாலும்,இதனை சுவைக்கும் போது சூப்பராக இருக்கும்.

click me!