நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்ற "கோதுமை சேமியா கிச்சடி"!

By Dinesh TGFirst Published Dec 27, 2022, 2:58 PM IST
Highlights

வாருங்கள்! ருசியான கோதுமை சேமியா கிச்சடியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய நவீன உலகத்தில் நம்மில் பலருக்கும் சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம், அதிக உடல் எடை என்று பல விதமான நோய்களால் அவதி பட்டு வருகிறோம். இதற்கு முக்கிய காரணம் நமது உணவு முறையில் ஏற்பட்ட மாற்றமே ஆகும். 

இம்மாதிரியான நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும், நமது உணவு முறைகளின் மூலமும் இதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். 

அந்த வகையில் இன்று சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கான ஹெல்த்தி கோதுமை சேமியா கிச்சடி ரெசிபியை தான் காண உள்ளோம். இது உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கூட எடுத்துக் கொள்ளலாம்.  அனைத்து வயதினருக்கும் ஏற்ற காலை சிற்றுண்டியாக இது இருக்கும். மேலும் வழக்கமாக நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்தும் ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.

வாருங்கள்! ருசியான கோதுமை சேமியா கிச்சடியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

கோதுமை சேமியா - 200 கிராம்
வெங்காயம்-1 
தக்காளி-1
கேரட்-1/2
வேகவைத்த பட்டாணி - 1/4 கப் 
பீன்ஸ்- 4
உருளைக்கிழங்கு -1 
பச்சைமிளகாய் - 4
உப்பு - தேவைக்யான அளவு 
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் 
லெமன் ஜூஸ்- 1 ஸ்பூன்

வீட்ல பிரெட் இருந்தா போதும் .டேஸ்டான வடையை சட்டென்று செய்து விடலாம்

தாளிப்பதற்கு :

எண்ணெய் -தேவையான அளவு 
கடுகு-1/4 ஸ்பூன் 
கடலைப் பருப்பு-1 ஸ்பூன் 
முந்திரி பருப்பு-10
நிலக்கடலை-10
கறிவேப்பிலை - 1 கொத்து 

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் கோதுமை சேமியாவை சேர்த்து (வெறும் கடாயில் )அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து நன்றாக வாசனை வரும் வரை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

வெங்காயம், தக்காளி ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கேரட், பீன்ஸ்,உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒரே மாதிரியான அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பட்டாணியை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு கடுகு, நிலக்கடலை, கடலைப்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் பின் முந்திரி பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். 

பின் அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கிய பிறகு , தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். 

தக்காளி நன்கு மசிந்த பிறகு, அரிந்து வைத்துள்ள காய்கறிகள் மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கி விட்டு பின் அதில் மஞ்சள் தூள்,உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 

காய்கறிகள் வெந்த பிறகு, கோதுமை சேமியா சேர்த்து கிளறி விட்டு பின் தீயினை மிதமாக வைத்து இறக்கி விட வேண்டும். பின் லெமன் ஜூஸ் சேர்த்து கிளறி விட்டு பரிமாறினால் சுவையான கோதுமை சேமியா கிச்சடி ரெடி!

click me!