Pineapple Kesari: ஆரோக்கியம் நிறைந்த அன்னாசி பழ கேசரி: ஈஸியா செய்யலாம்!

By Asianet Tamil  |  First Published Feb 23, 2023, 2:45 PM IST

அன்னாசிப் பழத்தைக் கொண்டு, சுவை மிகுந்த மற்றும் ஆரோக்கியமான கேசரியை எப்படி செய்யலாம் என்று காண்போம்.


நம்மில் பலரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று அன்னாசிப் பழம். அன்னாசிப் பழத்தில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. அன்னாசிப் பழத்தை சாப்பிட்டால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்; காயங்கள் குணமாகும்; உடல் எடையை குறைக்க உதவி செய்யும்; எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும். இவ்வாறு பல்வேறு நன்மைகளை அள்ளித் தரும் அன்னாசிப் பழத்தைக் கொண்டு, சுவை மிகுந்த மற்றும் ஆரோக்கியமான கேசரியை எப்படி செய்யலாம் என்று காண்போம்.

தேவையான பொருட்கள்

Latest Videos

undefined

நறுக்கிய அன்னாசிப் பழம் - 1 கப்
நாட்டு சர்க்கரை - 1 1/2 கப்
முந்திரி - 10
உலர் திராட்சை - சிறிதளவு
ரவை - 1 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - சிறிதளவு
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
நெய் - 1/2 கப்
எண்ணெய் - 1/3 கப்

இரத்த சோகையை தடுக்கும் "கறிவேப்பிலை பூரி" செய்து கொடுத்தால் குட்டிஸ்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

அன்னாசிப் பழ கேசரி செய்முறை

நெய் மற்றும் எண்ணெய் ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் 3 தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். பின்னர், ஒன்றிரண்டாக உடைத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பு சிவக்கும் வரை வறுத்தெடுக்க வேண்டும். இதனுடன் உலர் திராட்சையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

திராட்சை சற்று பெரிதானதும், அதை வெளியில் எடுத்து விட்டு வெட்டி வைத்துள்ள அன்னாசிப் பழத்தை அதே நெய்யில் சேர்த்து 4 முதல் 5 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் இதில் இரண்டரை கப் அளவு தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் ஏற்கனவே கலந்து வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி, அது சூடான பிறகு, ரவையை சேர்த்து மணல் மணலாய் வரும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும். அதன்பின் ஏற்கனவே கொதிக்க வைத்துள்ள அன்னாசி மற்றும் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக இதில் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இதில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் வற்றிய பின்னர், நாட்டு சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். கடைசியாக தேவை ஏற்பட்டால் மட்டும், மஞ்சள் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது கலந்து வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய்யை 4 தேக்கரண்டி அளவு இதன் மீது சேர்க்க வேண்டும். பின்னர் பாத்திரத்தை மூடி மிகவும் குறைவான சூட்டில் 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இறுதியாக ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடியைச் சேர்த்து கிளறினால் ஆரோக்கியம் நிறைந்த சூப்பரான அன்னாசி கேசரி ரெடியாகி விடும்.   

click me!