போரை நிறுத்தணும்.. சீக்கிரம் முடிவு எடுங்க.. இஸ்ரேல் - ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கும் டிரம்ப்!

Published : Oct 06, 2025, 10:41 PM IST

காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

PREV
15
விரைந்து முடிவு எடுங்கள்!

காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸுடன் மிகவும் நேர்மறையான விவாதங்கள் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கியமான பேச்சுவார்த்தைக் குழுக்கள் எகிப்தில் கூடவிருக்கும் நிலையில், டிரம்ப் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

25
போர் நிறுத்தத் திட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த வார இறுதியில், "பிணைக்கைதிகளை விடுவிப்பது, காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் மிக முக்கியமாக, மத்திய கிழக்கில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அமைதியைக் கொண்டு வருவது குறித்து, ஹமாஸ் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளுடன் மிக நேர்மறையான விவாதங்கள் நடந்துள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

"இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாகவும், விரைவாகவும் முன்னேறி வருகின்றன. இறுதி விவரங்களைப் பேசவும் தெளிவுபடுத்தவும் தொழில்நுட்பக் குழுக்கள் மீண்டும் திங்கட்கிழமை எகிப்தில் சந்திக்க உள்ளன. முதல் கட்டம் இந்த வாரத்திற்குள் நிறைவடையும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்," என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

35
பிணைக்கைதிகள் விடுதலை

கடந்த 2023 அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து வெடித்த இஸ்ரேல்-காசா மோதலை முடிவுக்குக் கொண்டு வரவும், பிணைக்கைதிகளை விடுவிக்கவும் இந்த போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பல உலகளாவிய மோதல்களைத் தீர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்ததாக டிரம்ப் கூறிவரும் நிலையில், காசா விவகாரத்திலும் அவரது தலையீடு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

45
ரகசிய பேச்சுவார்த்தை

காசாவில் போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இஸ்ரேலுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் காலில் அல்-ஹய்யா (Khalil al-Hayya) தலைமையிலான குழு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எகிப்திற்கு வந்துள்ளதாக பாலஸ்தீன அமைப்பு உறுதி செய்துள்ளது.

ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, இந்தப் பேச்சுவார்த்தைகள் இன்று (திங்கட்கிழமை) எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் நடைபெற உள்ளது.

55
இருதரப்புக்கும் சம்மதம்

கடந்த மாதம் கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்திய பிறகு, அல்-ஹய்யா ஒரு பேச்சுவார்த்தையில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்திற்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினரும் சாதகமாகப் பதிலளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலியச் சிறைகளில் உள்ள பாலஸ்தீனியக் கைதிகளுக்கு ஈடாக காசாவில் உள்ள இஸ்ரேலியப் பிணைக்கைதிகளை விடுவிப்பதே இந்தப் பிரதான திட்டமாகும். இருப்பினும், முக்கியமான இறுதி விவரங்கள் குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories