2025-ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறை நோபல் பரிசு, நோய் எதிர்ப்புச் சக்தி குறித்த ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகள் மேரி புரூன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல், மற்றும் ஷிமோன் சாககுச்சி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு திங்கட்கிழமை அன்று அறிவிக்கப்பட்டது. நோய் எதிர்ப்புச் சக்தி குறித்த ஆராய்ச்சிக்காக, விஞ்ஞானிகள் மேரி புரூன்கோவ் (Mary Brunkow), ஃப்ரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), மற்றும் ஷிமோன் சாககுச்சி (Shimon Sakaguchi) ஆகிய மூவருக்கும் இந்த உயரிய விருது பகிர்ந்தளிக்கப்படுவதாக, விருது வழங்கும் அமைப்பான கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் (Karolinska Institute) அறிவித்துள்ளது.
24
நோய் எதிர்ப்பு சக்தி குறித்த கண்டுபிடிப்பு
"நோய் எதிர்ப்புச் சக்தியின் புறத் தாங்குதிறன் (Peripheral Immune Tolerance) பற்றிய அவர்களின் கண்டுபிடிப்புகளுக்காக" இந்த விருது வழங்கப்படுகிறது. இது, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள், சொந்த செல்களைத் தாக்காமல் தடுக்கும் நுட்பத்தைப் பற்றியதாகும்.
நோபல் பரிசுக் குழு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "இவர்களின் கண்டுபிடிப்புகள் ஒரு புதிய ஆய்வுத் துறைக்கு அடித்தளமிட்டதுடன், புற்றுநோய் மற்றும் தாங்குதிறன் நோய்கள் (Autoimmune diseases) போன்றவற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் புதிய வழிமுறைகளின் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக அமைந்துள்ளன" என்று தெரிவித்துள்ளது.
34
10 கோடி ரூபாய் பரிசு
ஆறு நோபல் பரிசுகளில் முதல் பரிசான மருத்துவத் துறைக்கான இந்த விருது, ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில் அறிவிக்கப்பட்டது. இந்தப் பரிசு சுமார் சுமார் 10.65 கோடி பரிசுத் தொகையையும் உள்ளடக்கியதாகும்.
1901 முதல் 2024 வரை, மருத்துவத்திற்கான நோபல் பரிசு 115 முறை 229 நோபல் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, மைக்ரோஆர்என்ஏ (microRNA) பற்றிய கண்டுபிடிப்புக்காக அமெரிக்க விஞ்ஞானிகளான விக்டர் ஆம்பிரோஸ் (Victor Ambros) மற்றும் கேரி ருவ்கன் (Gary Ruvkun) ஆகியோருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது.
நோபல் பரிசு அறிவிப்புகள் செவ்வாய்க்கிழமை இயற்பியலுக்கும் (Physics), புதன்கிழமை வேதியியலுக்கும் (Chemistry), வியாழக்கிழமை இலக்கியத்திற்கும் (Literature) தொடரும். அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்கப்படும். பொருளாதாரத்திற்கான ஆல்பிரட் நோபல் நினைவுப் பரிசு (Nobel Memorial Prize in Economics) அக்டோபர் 13 அன்று அறிவிக்கப்படும்.
நோபல் பரிசுகள் அனைத்தும், அதன் நிறுவனர் ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று வெற்றியாளர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.