இந்தியா-பாகிஸ்தான் மோதல்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், பாகிஸ்தான் இதுபோன்ற துணிகரச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. பாகிஸ்தானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்திய அரசு தீவிரமாக யோசித்து வருவதாகத் தெரிகிறது. ஏற்கனவே உயர் மட்டத்தில் இதுகுறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், இந்தியா இந்த முடிவை எடுக்க வாய்ப்புள்ளது.
சர்வதேச அளவில் பாகிஸ்தானை மேலும் தனிமைப்படுத்தும் வகையில், இந்தியா யுக்திகரமான முடிவுகளை எடுத்து வருகிறது. பிப்ரவரி 2021 இல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்தியா யோசித்து வருவதாகத் தெரிகிறது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகிறது. இதனால் இந்தத் தீவிரவாத அமைப்புகள் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி வன்முறையில் ஈடுபடுகின்றன. சமீப ஆண்டுகளில், துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்கள் மூலம் பாகிஸ்தான் பலமுறை போர் நிறுத்தத்தை மீறியுள்ளது.