அமெரிக்காவின் H-1B விசா அனுமதிகளில் இந்திய ஐடி நிறுவனங்களின் பங்கு 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 70% சரிந்துள்ளது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு திறன்களுக்காக வெளிநாட்டு ஊழியர்களை அதிகளவில் பணியமர்த்தி ஆதிக்கம் செலுத்துகின்றன.
அமெரிக்காவின் H-1B விசா அனுமதிகளில் இந்தியாவை தளமாகக் கொண்ட ஐடி நிறுவனங்களின் பங்கு கணிசமாக சரிந்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை வளர்க்க வெளிநாட்டுத் திறமைகளை அதிகளவில் பணியமர்த்துவதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
தேசிய அமெரிக்கக் கொள்கை அறக்கட்டளை (NFAP) அளித்த அறிக்கையின்படி, 2025ஆம் நிதியாண்டில், இந்தியாவின் முதல் ஏழு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளுக்காகக் கிடைத்த H-1B விசா ஒப்புதல்கள் வெறும் 4,573 மட்டுமே. இது 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 70% குறைவு ஆகும். கடந்த 2024ஆம் ஆண்டைக் காட்டிலும் இது 37% குறைவாகும்.
24
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)
தொடர்ந்து பணியாற்றுவதற்கான H-1B விசா ஒப்புதல்களில் முதல் ஐந்து நிறுவனங்களில் இடம்பெற்ற ஒரே இந்திய நிறுவனம் TCS ஆகும். எனினும், புதிய வேலைவாய்ப்புக்கான விசா ஒப்புதல்கள் கடந்த ஆண்டு 1,452 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 846 ஆகக் கடுமையாகக் குறைந்துவிட்டது.
தொடர்ந்து பணியாற்றுவதற்கான விசா நீட்டிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் விகிதம் (Rejection Rate) 2024இல் 4% ஆக இருந்தது, அது 2025இல் 7% ஆக உயர்ந்து, மற்ற இந்திய நிறுவனங்களைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது.
34
அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கம்
2025 நிதியாண்டில் புதிய வேலைவாய்ப்புக்கான H-1B ஒப்புதல்களில் முதல் நான்கு இடங்களை அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. அமேசான் (Amazon) அதிகபட்சமாக 4,644 ஒப்புதல்களைப் பெற்றது. அதைத்தொடர்ந்து மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் (1,555), மைக்ரோசாஃப்ட் (1,394), மற்றும் கூகிள் (1,050) ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஒப்புதல்களிலும் அமேசான் முதலிடம் வகிக்கிறது (14,532). இரண்டாவது இடத்தில் TCS (5,293) உள்ளது.
புதிய வேலைவாய்ப்புக்கான H-1B ஒப்புதல்கள் பெற்ற முதல் 25 நிறுவனங்களில் TCS, LTIMindtree (20வது இடம்), மற்றும் HCL America (21வது இடம்) ஆகிய மூன்று இந்திய நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
H-1B விசா நிராகரிப்பு விகிதம் (Denial Rate) 2025 நிதியாண்டில் 1.9% ஆக உள்ளது. இது கடந்த ஆண்டின் 1.8% உடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது. மேலும் 2023ஆம் ஆண்டின் 2.4% ஐ விடக் குறைவாகும்.
தற்போது, அமெரிக்காவில் திறமையான பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பல வெளிநாட்டவர்கள் அமெரிக்கர்களால் பயிற்சி பெறாத நுட்பமான பணிகளைச் செய்கிறார்கள் என்று குடிவரவு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.