
சின்னத்திரை சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதால், அதில் ஏராளமான புதுப் புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு முன்னர் வரை இரண்டு சீரியல்களை ஒரே கதைக்களத்தில் கொண்டு வந்து ஒளிபரப்பி வந்தனர். அண்மையில் புது முயற்சியாக மூன்று சீரியல்களை ஒன்றிணைத்து மெகா சங்கமம் என்கிற பெயரில் சினிமா போன்று ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பி வருகிறது சன் டிவி. இந்த மெகா சங்கமத்தால், டிஆர்பி ரேஸில் அதிரடி மாற்றம் நிகழ்ந்ததோடு, டாப் 10 சீரியல்களின் பட்டியலும் தலைகீழாக மாறி இருக்கிறது. அதன் முழு பட்டியலை தற்போது பார்க்கலாம்.
ஜீ தமிழ் சீரியல்கள் கடந்த சில வாரங்களாக டாப் 10 பட்டியலில் தலைகாட்டாமல் இருந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் டாப் 10 பட்டியலுக்குள் வந்துள்ளது. கடந்த வாரம் 12வது இடத்தில் இருந்த அந்த சீரியல் இந்த வாரம் 5.42 டிஆர்பி ரேட்டிங் உடன் 10வது இடத்தில் உள்ளது.
விஜய் டிவியில் நவீன் மற்றும் ஸ்வேதா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல், கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 9-வது இடத்தில் நீடிக்கிறது. கடந்த வாரம் 7.35 புள்ளிகள் பெற்றிருந்த இந்த சீரியல் இந்த வாரம் 6.25 டிஆர்பி புள்ளிகளை மட்டுமே பெற்று சரிவை சந்தித்து இருக்கிறது.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த சில வாரங்களாக டாப் 10 பட்டியலிலேயே இடம்பெறாமல் இருந்த நிலையில், இந்த வாரம் மீண்டும் டாப் 10 ரேஸில் இடம்பிடித்துள்ளது. கடந்த வாரம் 6.38 புள்ளிகளுடன் 11வது இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 6.27 புள்ளிகளை பெற்று 8-ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டப்பிங் சீரியலான இராமாயணம் கிளைமாக்ஸை நெருங்கி வருவதால், அதுவும் டிஆர்பி ரேஸில் மளமளவென முன்னேறி இருக்கிறது. கடந்த வாரம் 6.64 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல் இந்த வாரம் 6.85 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளது.
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான அய்யனார் துணை, கடந்த வாரம் 7.99 டிஆர்பி ரேட்டிங் உடன் 8-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் கடகடவென முன்னேறி 6-ம் இடத்தை பிடித்திருக்கிறது. அய்யனார் துணை சீரியலுக்கு இந்த வாரம் 7.36 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது.
விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலான சிறகடிக்க ஆசை கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 5-ம் இடத்திலேயே நீடிக்கிறது. கடந்த வாரம் 8.28 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல் இந்த வாரம் அதைவிட குறைவாக... அதாவது 7.82 டிஆர்பி ரேட்டிங்கை மட்டுமே பெற்றிருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல், கடந்த வாரம் 8.92 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 4ம் இடத்தை பிடித்துள்ளது. இருப்பினும் கடந்த வாரத்தை விட கூடுதலாக டிஆர்பி (9.02) ரேட்டிங் பெற்றுள்ளது.
சன் டிவியின் கயல், அன்னம் மற்றும் மருமகள் ஆகிய சீரியல்களின் மெகா சங்கமம் சுமார் 1.30 மணிநேர தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் டிஆர்பி ரேஸிலும் மடமடவென முன்னேறி இருக்கிறது. மெகா சங்கமத்துக்கு 9.66 புள்ளிகள் கிடைத்துள்ளதால் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
சன் டிவியில் நம்பர் 1 சீரியலாக இருந்து வந்த சிங்கப்பெண்ணே இந்த வாரம் சரிவை சந்தித்து 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த சீரியல் கடந்த வாரம் 9.73 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 9.99 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.
இந்த வார டிஆர்பி ரேஸில் முதலிடத்தை பிடித்திருப்பது சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் தான். கடந்த வாரம் 9.40 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் சிங்கப்பெண்ணே சீரியலை பின்னுக்கு தள்ளி, 10.14 புள்ளிகள் உடன் முதலிடத்தை பிடித்துள்ளது.