விஜய் டிவியில் பிரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்த நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியலும் ஒன்று. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ரோகிணி பற்றிய உண்மையை அண்மையில் மீனா கண்டுபிடித்த நிலையில் அடுத்தடுத்த பரபரப்பான திருப்பங்களுடன் கதைக்களம் நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்த நடிகை ஒருவர் வீட்டிலேயே தற்கொலை செய்து இறந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை மரணம்
அவர் பெயர் ராஜேஸ்வரி. சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் சகோதரி சீதாவின் கணவரான அருணின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ராஜேஸ்வரி. இவர் திருமணமாகி தன்னுடைய கணவருடன் சென்னை பிராட்வேயில் உள்ள வீட்டில் வசித்து வந்திருக்கிறார். வீட்டில் கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கோபித்துக்கொண்டு சைதாப்பேட்டையில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்றிருக்கிறார் ராஜேஸ்வரி. கணவர் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த சில தினங்களாகவே மன உளைச்சலில் இருந்திருக்கிறார் ராஜேஸ்வரி.
34
ராஜேஸ்வரி தற்கொலைக்கு முயன்றது ஏன்?
ஒரு கட்டத்தில் மன உளைச்சல் அதிகமானதால் தன்னுடைய அம்மா வீட்டில் இருந்த பிபி மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கு ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அவரின் மறைவு சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த சீரியலில் டென்ஷன் பார்ட்டியாக இருக்கும் அருணுக்கு புத்திமதி சொல்லும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராஜேஸ்வரி. ஆனால் அவரின் இந்த விபரீத முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
நடிகை ராஜேஸ்வரி சிறகடிக்க ஆசை சீரியலில் மட்டுமல்லாது, அண்மையில் நிறைவடைந்த விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான பாக்கியலட்சுமி தொடரிலும் துணை நடிகையாக நடித்திருக்கிறார். அந்த சீரியலில் பாக்கியாவின் தோழி கதாபாத்திரத்தில் ராஜேஸ்வரி நடித்திருந்தார். இவர் இன்ஸ்டாகிராமிலும் படு ஆக்டிவாக இருந்தது மட்டுமின்றி, அதில் விதவிதமாக ரீல்ஸ் வீடியோக்கள் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். ராஜேஸ்வரியின் தற்கொலை தொடர்பாக அவருடைய குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.