
தங்கமயில் மற்றும் சரவணன் இடையிலான குடும்ப பிரச்சனையே இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. எல்லோரது வீட்டிலும் நடப்பது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிலும் நடந்து வருகிறது. பொதுவாக ஒரு குடும்பத்தில் பொய் சொல்லி ஏமாற்றினால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை மையப்படுத்திய காட்சி தான் சரவணன் மற்றும் தங்கமயிலுக்கு இடையிலான காட்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.
சுயம்வரம் மூலமாக சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் பெற்றோர்களால் பார்த்து நிச்சயித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தின் போது தங்கமயில் எம் ஏ வரையில் படித்திருப்பதாகவும், சரவணனைவிட 2 வயது சிறியவள் என்று பொய் சொல்லி திருமணம் செய்து வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி 80 சவரன் நகையையும் மயிலுக்கு திருமண சீராக கொடுத்திருக்கிறார்கள். உண்மையில் இந்த 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டுமே தங்கம். மீதமுள்ள 72 சவரன் நகை எல்லாம் கவரிங்.
இந்த நிலையில் தான் தங்கமயில் ஹோட்டலில் சர்வர் வேலை பார்ப்பதை சரவணன் பார்த்துவிடவே இருவருக்கும் இடையில் சண்டை உருவானது. அன்று முதல் இன்று வரையில் அவர்களுக்கு இடையிலான சண்டையே குடும்பத்தில் பூகம்பமாக வெடித்து வருகிறது. இதற்கிடையில் சரவணன் அப்பாவாக போவதாகவும், பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் தாத்தா பாட்டியாக போவதாகவும் பொய் சொல்லி தங்கமயில் வீட்டிற்குள் வந்தார்.
ஆனால், அவர் உண்டாகவில்லை என்பதை டாக்டர் தெளிவுபடுத்தவே தங்கமயில் இந்த விஷயத்தில் பொய் சொல்லி தன்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறி அவருடன் சண்டை போட்டுவந்துள்ளார். இந்த சண்டை பிரச்சனை எப்படியோ பாண்டியன் மற்றும் கோமதி இருவருக்கும் தெரியவர இதைப் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு மயில் உங்களது மகன் என்னை சந்தேகப்படுகிறார். என்னுடன் பேசுவதே இல்லை. அவருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் இருக்கிறது என்று நினைக்கிறேன் என்று அவர் மீதே பழியை தூக்கிப்போட்டார்.
தனது மகன் என்று கூட பார்க்காமல் பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் சரவணனை கண்டித்தனர். இந்த நிலையில் தான் சரவணனுக்கு மயிலின் படிப்பு விஷயம் மற்றும் வயது என்று எல்லா உண்மைகளும் தெரியவர அதிர்ச்சி அடைந்தார். ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லியும்விட்டார். அதன் பிறகு தங்கமயிலின் அப்பா, அம்மாவை வர வைத்து பஞ்சாயத்து பேசினர்.
அவர்களும் என்னென்னமோ டிராமா போட்டனர். ஆனால், எதுவும் ஒர்க் அவுட்டாகவில்லை. கடைசியில் ஜாதகம், தோஷம் என்று ஆரம்பிக்க பாண்டியன் எல்லாவற்றையும் மறந்து உண்மையை சொல்லியிருந்தால் உங்களது மகளை ஏற்றுக் கொண்டிருப்போம். ஆனால், பொய் சொல்லி, அந்த பொய்யை மறைக்க இன்னொரு பொய், இன்னொரு பொய் என்று அடுக்கடுக்காக பொய் சொல்லி இப்போது என்னுடைய மகனின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
இனிமேல் நீ சொல்வது உண்மையா பொய்யா என்று எங்களுக்கு எதுவும் தெரியாத சூழலில் நீ உன்னுடைய வீட்டிற்கு கிள்ம்பிவிடு. அதுதான் எங்களுக்கு நல்லது என்று சொல்லி தங்கமயிலை வீட்டை விட்டு துரத்தினர். இதையடுத்து தங்கமயில், பாக்கியம் மற்றும் மாணிக்கம் ஆகியோர் நடுத்தெருவுக்கு வந்தனர். இந்த நிலையில் தான் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சிரியலின் புரோமோ வீடியோ வெளியானது.
அதில், தங்கமயில் வீட்டிற்குள் வருவதற்கு வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை கோமதி கழுத்தைப்பிடித்து வெளியில் தள்ளி கதவை தாழிட்டார். மேலும், தங்கமயிலின் அம்மாவுக்கு போன் போட அவரும் தனது மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஊரார் முன்னிலையில் நின்று கத்தி சாபம்விட்டார். இந்த நிலையில் தான் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்த சரவணன், திரும்ப திரும்ப குடும்பமாக வந்து எங்க எல்லோரையும் இப்படி டார்ச்சர் பண்ணுறீங்க.
இப்போது நீ இங்கிருந்து கிளம்பவில்லை என்றால், என்னுடைய சாவுக்கு நீ, உன்னுடைய அம்மா, அப்பா தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன். எனக்கு இவளுடன் வாழ விருப்பமில்லை. இவள் வேண்டாம். இவளிடமிருந்து எனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுங்கள் கேட்க, இதைக் கேட்டு தங்கமயில் அதிர்ச்சியாவதோடு புரோமோ வீடியோ முடிகிறது. சரவணன் கேட்டபடி அவருக்கு விவாகரத்து கிடைக்குமா? இல்லை, சரவணன் தங்கமயில் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வார்களா? இல்லை போலீஸ் மூலமாக இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டப்படுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.