Pandian Stores 2: மூன்றாக பிரியும் சொத்து?! கோமதியின் வருகையை தடுக்க துடிக்கும் சக்திவேல்.! பாண்டியன் ஸ்டோர்ஸில் அரங்கேறும் புதிய சதித்திட்டம்.!

Published : Jan 20, 2026, 08:04 AM IST

Pandian Stores 2: தாய் வீட்டிற்கு செல்லும் ராஜிக்கு அன்பான வரவேற்பு கிடைக்கிறது. மறுபுறம், சொத்துக்காக ராஜியின் சித்தப்பா சக்திவேல் சதித்திட்டம் தீட்ட, மீனா இரு குடும்பங்களையும் இணைக்க ஒரு புதிய யோசனையை முன்வைக்கிறார்.

PREV
14
ராஜிக்கு கிடைத்த அன்பான வரவேற்பு

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரின் 694-வது எபிசோடில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜி தனது தாய் வீட்டிற்குச் செல்வதும், அங்கு நடக்கும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும், மறுபுறம் சொத்துக்காகத் தீட்டப்படும் சதித்திட்டங்களும் கதையை விறுவிறுப்பாக்கியுள்ளன. இந்த எபிசோடின் முக்கிய நிகழ்வுகள் இதோ…

வெகுநாட்களுக்குப் பிறகு ராஜி தனது தந்தை வீட்டிற்குச் செல்கிறார். அவரைப் பார்த்ததும் அவரது அம்மா, சித்தி மற்றும் பாட்டி ஆகியோர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து, அன்போடு வரவேற்கிறார்கள். குறிப்பாக, வெயிலில் கூட அலையவிடாமல் வளர்த்த தங்கத்தைப் போய் போலீஸ் ஸ்டேஷன் வரை இழுத்துவிட்டார்களே என ராஜியின் அம்மா கண்கலங்குகிறார். அப்போது அங்கு வந்த ராஜியின் தந்தை மற்றும் சித்தப்பாவிடம், "உங்களைப் பார்க்க வேண்டும் போல் இருந்ததால் வந்தேன், நான் வந்தது பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடுங்கள், என்னை வெளியே துரத்திவிட மாட்டீர்களே?" என ராஜி உருக்கமாகக் கேட்கிறார். அதற்கு அவரது தந்தை "நல்லா இருக்கியா?" என்று நலம் விசாரித்தது ராஜியைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

24
சக்திவேலின் நயவஞ்சகத் திட்டம்

மறுபுறம், ராஜியின் சித்தப்பா சக்திவேல் தனது மகனுடன் காரில் செல்லும்போது தனது வன்மத்தை வெளிப்படுத்துகிறார். தனக்கும் தனது அண்ணனுக்கும் விரைவில் சண்டை வரும் எனக்கூறும் அவர், ராஜி வீட்டிற்கு வந்ததை முற்றிலும் விரும்பவில்லை எனத் தெரிவிக்கிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு கோமதி வீட்டை விட்டு ஓடிப்போனதை ஊர் இன்னும் பேசிக்கொண்டிருப்பதாகவும், ராஜி போன்றவர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தால் மொத்த சொத்தும் பிரிந்துவிடும் என்றும் கவலைப்படுகிறார். சொத்துக்கள் முழுவதும் தனது மகனுக்கே சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சக்திவேல், எக்காரணத்தைக் கொண்டும் பாண்டியன் குடும்பமும் தங்கள் குடும்பமும் ஒன்று சேரக்கூடாது எனத் தனது மகனிடம் சதித்திட்டம் தீட்டுகிறார்.

34
நெகிழ்ச்சியான குடும்பத் தருணங்கள்

தாய் வீட்டில் இருக்கும் ராஜி, தனது அம்மா மற்றும் பாட்டியுடன் அமர்ந்து பழைய புகைப்படங்களைப் பார்த்து நெகிழ்ந்து போகிறார். ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டு அன்பைப் பகிர்ந்து கொள்கின்றனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ராஜியின் அம்மா அவருக்குப் பாசத்துடன் சாப்பாடு ஊட்டி விடுகிறார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் ராஜி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். அவர் கிளம்பும்போது, "மீண்டும் எப்போது வருவாய்?" என அம்மா கேட்க, பாட்டியோ "அடுத்த முறை வரும்போது கோமதியையும் அழைத்து வர வேண்டும்" என்று ஆசையுடன் கூறுகிறார்.

44
மீனா கொடுத்த அதிரடி ஐடியா

தனது தாய் வீட்டிலிருந்து மகிழ்ச்சியுடன் திரும்பிய ராஜியை, கோமதி ஆவலுடன் வரவேற்கிறார். அங்கு நடந்த இனிமையான சம்பவங்களை ராஜி விவரிக்க, அதைக் கேட்டு கோமதி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். தனக்கும் தனது தாய் வீட்டிற்குச் செல்ல ஆசை இருப்பதாக அவர் கூறுகிறார். அப்போது குறுக்கிடும் மீனா, கோர்ட் மற்றும் கேஸ் விவகாரங்களில் உதவி செய்ததற்காக நன்றி சொல்லும் விதமாக, ராஜியின் அப்பா மற்றும் சித்தப்பாவை தங்கள் வீட்டிற்கே விருந்துக்கு அழைக்கலாம் என்று ஒரு புதிய யோசனையைத் தெரிவிக்கிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories